ஆஸ்திரேலியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மழையுடன் சேர்ந்து லபுஷேன் வெறியாட்டம்.. சோகத்தில் இங்கிலாந்து!
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 4வது போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடி வந்த நிலையில், லபுஷேன் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். அதேபோல் மழையும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு உதவியாக உள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 317 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி கிராலியின் அபார சதத்தால் 592 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 275 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன் காரணமாக 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸை தோல்வியடைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. இதன்பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 4ஆவது நாள் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட உணவு இடைவேளை வரை மழை பெய்ததால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதன்பின் லபுஷேன் - மிட்செல் மார்ஷ் இணை ஆட்டத்தை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே லபுஷேன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்க் வுட் மற்றும் வோக்ஸ் பந்துகளை கவனமாக எதிர்கொண்ட லபுஷேன், ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்த போது பவுண்டரியும், சிக்சருமாய் வெளுத்தார்.

99 பந்துகளில் அரைசதம் விளாசிய லபுஷேன், 161 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்ததோடு, வீரர்களின் நம்பிக்கையும் அதிகரித்தது. 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த நிலையில், லபுஷேன் 111 ரன்கள் எடுத்து ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷ் - க்ரீன் கூட்டணி இணைந்து நிதானமாக ஆடியது. இதன் பின் தேநீர் இடைவேளை அளிக்கப்பட, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்துள்ளது. வெறும் 61 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மீண்டும் 4வது நாள் ஆட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications