பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தாக்குதல் பாணி ஆட்டத்தையும் ஆஸ்திரேலிய அணி எளிதாக சமாளித்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் பிடி எங்கு தளர்ந்தது என்பது பார்க்கலாம்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் போட்டி ரசிகர்களுக்கு உச்சக்கட்ட பரபரப்பை கொடுத்து முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா என்ன பதில் வைத்திருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆஸி. அணியோ சாதாரண டெஸ்ட் கிரிக்கெட் மூலமாகவே எளிதாக வீழ்த்தி அனைவருக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து அணி களமிறங்குவதற்கு முன்பாகவே சில அடிப்படை தவறுகளை செய்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணியின் பேஸ் பால் திட்டத்திற்காக பிளாட் பிட்ச்களை கோரிய இங்கிலாந்து அணி, பிளாட் பிட்ச்களில் சிறப்பாக செயல்படும் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்ய தவறியது. மாற்றாக ஆண்டர்சன், பிராட், ராபின்சன் ஆகியோரையும், வேறு வழியின்றி மொயின் அலியையும் சேர்த்து தவறு செய்தது.
ஆண்டர்சன் அல்லது பிராட் என்று இருவரில் ஒருவரை மட்டும் தேர்வு செய்துவிட்டு, அதிவேகமாக வீசக்கூடிய மார்க் வுட் பிளாட் பிட்ச்களில் தேர்வு செய்திருக்க வேண்டும். இதில் ஆஸ்திரேலிய அணி தெளிவுடன் ஸ்டார்க்கை நீக்கிவிட்டு போலாந்தை சேர்த்தது சரியான வியூகமாகவும் அமைந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியை ஒப்பிடுகையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் பிளாட் பிட்ச்களில் செயல்படுவது அவ்வளவு கடினமாக இருக்காது.

அதேபோல் முதல் இன்னிங்ஸில் சுமார் 400 ரன்களை எட்டிய உடன் வார்னரின் ஒரு விக்கெட்டுக்காக டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒருவேளை ரூட் மற்றும் ராபின்சன் இணை மேலும் 50 ரன்கள் சேர்த்திருந்தால், அந்த அணியின் முன்னிலை சுமார் 60 ரன்களை எட்டியிருக்கும். இதன் மூலம் ஆஸி. அணியை மனரீதியாக வீழ்த்தி இருக்கலாம். அதேபோல் மழை காரணமாக ஆஸி. அணியால் இலக்கையும் எட்டியிருக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல் ஆஸி. கேப்டன் கம்மின்ஸை பந்துவீச்சாளர் என்று மட்டுமே அடையாளப்படுத்திட முடியாது. இதுபோன்ற பிளாட் பிட்ச்களில் ஐபிஎல் தொடரின் போது கம்மின்ஸ் அபாயகரமான வீரராக இருப்பார். அதனால் கம்மின்ஸ் வந்ததும் இங்கிலாந்து அணி பழைய பாணியிலான டெஸ்ட் கிரிக்கெட் முறையான ரன்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இந்த தவறுகளை எல்லாம் இங்கிலாந்து அணி மாற்றிக் கொண்டு அடுத்தப் போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.