சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 134 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2007-ல் இந்திய அணி படைத்த உலக சாதனைக்குப் பிறகு, ஆஸ்திரேலியா மட்டுமே இந்தச் சாதனையை இப்போது நிகழ்த்திக் காட்டியுள்ளது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடைபெற்று வரும் 5-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மிரட்டி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளது.

இதற்கு முன் ஆஷஸ் வரலாற்றில், 1892-ம் ஆண்டில், அதாவது 134 ஆண்டுகளுக்கு முன், அடிலெய்டு டெஸ்டில் இங்கிலாந்து அணி 6 முறை 50+ ரன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்ததே ஆஷஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த நீண்ட காலச் சாதனையை ஆஸ்திரேலியா தகர்த்தெறிந்துள்ளது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே இன்னிங்ஸில் அதிக முறை 50+ ரன் கூட்டணிகளை அமைத்த பெருமை இந்திய அணியையே சாரும்.
2007-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 8 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தது.
அனில் கும்ப்ளே தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தது இந்தப் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு, இப்போதுதான் ஆஸ்திரேலிய அணி 7 முறை அத்தகைய கூட்டணியை அமைத்து, இந்தியாவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் சதத்தால் 384 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தனது 37-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 129 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் எடுத்து, 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. அடுத்து மிட்செல் ஸ்டார்க் களமிறங்கவுள்ளார். எஞ்சியுள்ள விக்கெட்டுகளுக்கு இன்னும் ஒரு முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தால், ஆஸ்திரேலியா இந்தியாவின் உலக சாதனையைச் சமன் செய்யும் வாய்ப்புள்ளது.