மெல்போர்ன்: சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராகத் திணறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டுகளான புஜாரா மற்றும் ரஹானேவின் குறிப்பிட்ட பாணியைக் கடைபிடிக்குமாறு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆஷஸ் 2025-26 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்றது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான, புற்கள் நிறைந்த இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கடுமையாகத் திணறினர். முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களுக்கும் ஆஸ்திரேலிய அணி சுருண்டது. இதன் விளைவாக, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்தத் தோல்வி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றம் வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, அவர்களுக்கு முக்கிய அறிவுரையொன்றை வழங்கியுள்ளார்.
"இது போன்ற ஆடுகளங்கள் விளையாடவே முடியாதவை அல்ல. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் நவீன கால கிரிக்கெட் வீரர்கள் திணறுகின்றனர். இங்கே 300 ரன்களுக்கு மேல் குவிப்பது கடினம். ஆனால், சரியான பேட்டிங் உத்தி மற்றும் மன உறுதியுடன் போராடினால் 250 ரன்கள் வரை நிச்சயம் எடுக்க முடியும்.
கடினமான ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் எப்படி நிதானத்துடனும், போராட்ட குணத்துடனும் விளையாடுவார்களோ, அதை ஆஸ்திரேலிய வீரர்கள் பின்பற்ற வேண்டும். அப்படி விளையாடினால் நிச்சயம் ரன் குவிக்க முடியும்" என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களில் முடிவடைவது குறித்து அதிருப்தி தெரிவித்தார். "இன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முறை மாறிவிட்டது. இரண்டு நாட்களில் ஆட்டம் முடிவதை நான் ரசிக்கவில்லை. மெல்போர்ன் டெஸ்டில் ஜோ ரூட் போன்ற ஒரு சிறந்த வீரரே, தாக்குதல் ஆட்டம் ஆடுவதா அல்லது இயல்பான ஆட்டம் ஆடுவதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்" என்று கூறினார்.
இதற்கிடையில், ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) தொடங்கவுள்ளது. மெல்போர்னைப் போலவே சிட்னி ஆடுகளத்திலும் புற்கள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இங்கு நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டியும் இரண்டரை நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஒரு தரமான போட்டியை வழங்க வேண்டிய கட்டாயத்தில் ஆடுகளப் பராமரிப்பாளர் ஆடம் லூயிஸ் உள்ளார். சிட்னியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் உத்தப்பாவின் அறிவுரையை ஏற்றுப் பொறுமையுடன் விளையாடுவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.