AUS vs ENG: எந்த அணியும் செய்யாததை செய்த ஆஸ்திரேலியா.. பகல் - இரவு டெஸ்ட்டில் புதிய ரெக்கார்டு
பிரிஸ்பேன்: 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு அரிய உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை எந்த அணியும் செய்யாத ஒரு சாதனையை ஆஸ்திரேலிய வீரர்கள் செய்து இங்கிலாந்தை மிரள வைத்துள்ளனர்.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து, 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இந்த ஸ்கோரை விட, அதை அவர்கள் எட்டிய விதம் தான் தற்போது கிரிக்கெட் உலகின் பேசுபொருளாகியுள்ளது.

11 பேரும் கில்லி.. ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை!
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய 11 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை, அதாவது 10 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி இப்படி ஒரு சாதனையைச் செய்வது இதுவே முதல் முறையாகும்.
மொத்த டெஸ்ட் வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஆஸ்திரேலியா இப்படிச் செய்வது இது மூன்றாவது முறை. 1948-ல் இந்தியாவுக்கு எதிராக, 1992-ல் இலங்கைக்கு எதிராக மற்றும் 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக இப்போது இந்த சாதனையை செய்துள்ளது ஆஸ்திரேலியா.
குறிப்பாக, ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் (Day-Night Test) ஒரு அணியின் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை எடுப்பது இதுவே உலக வரலாற்றில் முதல் முறையாகும்.
சதமே இல்லாமல் 511 ரன்கள்!
இந்த இன்னிங்ஸின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், அணியில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. ஆனால் அணியின் மொத்த ஸ்கோர் 511. மிட்செல் ஸ்டார்க் தான் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். ஜேக் வெதரால்ட் (72), மார்னஸ் லபுஷேன் (65), ஸ்டீவ் ஸ்மித் (61), அலெக்ஸ் கேரி (46) என அனைவரும் கூட்டு முயற்சியால் ரன்களைக் குவித்தனர்.
ஒரு தனிநபர் சதம் இல்லாமலே அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் இது 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் இலங்கை - 531 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக 2024-ல் இலங்கை அணி அந்த சாதனையை செய்து இருந்தது.
இங்கிலாந்தை சோதித்த ஸ்டார்க்
பந்துவீச்சில் மிரட்டும் மிட்செல் ஸ்டார்க், பேட்டிங்கிலும் இங்கிலாந்தை வெளுத்து வாங்கினார். 141 பந்துகளைச் சந்தித்த அவர் 77 ரன்கள் குவித்தார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்காட் போலண்டுடன் இணைந்து 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்றார்.
இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 152 ரன்களை வாரி வழங்கினார். பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்போது 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications