AUS vs ENG: பிங்க் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை கதற விட்ட இங்கிலாந்து.. ஆட்டத்தை மாற்றிய 10-வது விக்கெட்
பிரிஸ்பேன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பகல்-இரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி ஆஸ்திரேலியாவை மிரள வைத்துள்ளது. குறிப்பாக ஜோ ரூட் மற்றும் கடைசி விக்கெட் ஜோடி ஆடிய ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பகல்-இரவு டெஸ்ட் ஆதிக்கத்திற்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணி 264 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, ஜோ ரூட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஜோடி இணைந்தது. இந்த கடைசி விக்கெட் கூட்டணி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்குத் தண்ணி காட்டியது. இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்தனர். இது பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் அமைக்கப்பட்ட அதிகபட்ச 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன் 2023-ல் நியூசிலாந்து ஜோடி பிளண்டல் மற்றும் டிக்னர் அமைத்த 59 ரன்கள் சாதனையை முறியடித்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 135 ரன்களுடனும் (202 பந்துகள்), ஆர்ச்சர் 26 பந்துகளில் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தா?
இந்த ஸ்கோர் ஏன் முக்கியம் என்றால், பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த எந்த அணியும் இதுவரை தோல்வியைத் தழுவியதில்லை. பகல்-இரவு டெஸ்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. மேலும், இங்கிலாந்து எடுத்த 325 ரன்கள் என்பது பகல் - இரவு டெஸ்டில் ஒரு நாளில் அடிக்கப்பட்ட 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ரூட் படைத்த சாதனை
ஜோ ரூட் 135 ரன்கள் குவித்ததன் மூலம், 2002-ம் ஆண்டு அடிலெய்டில் மைக்கேல் வான் 177 ரன்கள் அடித்த சாதனைக்கு அடுத்ததாக, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இது ஜோ ரூட்டின் முதல் சதமாகும்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் அனல் பறக்க பந்துவீசினாலும், ரூட்டின் நிதானமும், ஆர்ச்சரின் அதிரடியும் இங்கிலாந்தை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications