40 ஆண்டுக்கால நடைமுறையை மாற்றிய ஆஸ்திரேலியா.. ஆஷஸ் டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு
உலகின் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்றாக கருதப்படும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலியா தற்போது அறிவித்திருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை வரும் 12 மாதங்களில் இரண்டு மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
ஒன்று இந்தியா விளையாடும் பார்டர் கவாஸ்கர் தொடர். ஏனென்றால் இந்த தொடரை ஆஸ்திரேலிய வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மற்றொன்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர். பார்டர் கவாஸ்கர் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி 2025 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதன் மூலம் 40 ஆண்டுகால நடைமுறையை ஆஸ்திரேலியா மாற்றி இருக்கிறது. எப்போதும் ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பிரிஸ்பேன் நகரில் தான் நடைபெறும்.
இந்த பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா கடைசியாக 1986 ஆம் ஆண்டு தான் தோற்றது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் தோற்றதே இல்லை என்ற பெருமையை இந்திய அணி கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த சூழலில் பிரிஸ்பேனில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் 40 ஆண்டுக்கால பழக்கத்தை மாற்றி உள்ள ஆஸ்திரேலியா தற்போது பெர்த்க்கு அந்த கௌரவத்தை வழங்கி இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேன் காபாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் அடிலெய்ட் நகரில் டிசம்பர் 17ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் பாக்ஸிங் டே அன்று டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் நகரிலும் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு டெஸ்ட் ஜனவரி 4ஆம் தேதி சிட்னியில் 5வது டெஸ்ட் நடைபெறுகிறது.
ஆஷஸ் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட்களில் 13 வெற்றி இரண்டு டிராவை கண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு சிட்னியில் டெஸ்ட் போட்டியை வென்றது. அதன் பிறகு 13 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை கூட பெறாமல் தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications