அடிலெய்டு: "விடாது கருப்பு" போல இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா தொடர்ந்து துரத்தி துரத்தி அடித்து வருகிறது. அடிலெய்டு ஓவலில் நடந்து வரும் 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ட்ராவிஸ் ஹெட்டின் சொந்த மண் சதத்தால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்து போயுள்ளது.
ஏற்கனவே தொடரில் 0-2 என பின் தங்கியுள்ள இங்கிலாந்து, இந்த போட்டியிலும் தோல்வியின் விளிம்பில் நிற்கிறது. ஆஸ்திரேலியா தற்போது 356 ரன்கள் முன்னிலை பெற்று, ஆஷஸ் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் ஆதிக்கம் காட்டி வருகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 371 ரன்களை துரத்திய இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் அரை சதத்தால் 286 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 85 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு, மீண்டும் சிம்ம சொப்பனமாக மாறினார் ட்ராவிஸ் ஹெட்.
வழக்கம் போல் அதிரடியாக ஆடிய ஹெட், தனது 11வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இது இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடிக்கும் 4வது சதம். அதுமட்டுமின்றி அடிலெய்டு மைதானத்தில் அவர் அடிக்கும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ட்ராவிஸ் ஹெட் 142 ரன்களுடனும் (196 பந்துகள்), அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறிய போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (83 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் (51 ரன்கள்) ஜோடி 9வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்து அணியை மீட்க முயன்றனர். ஆர்ச்சர் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் இந்த ஜோடியை பிரித்து இங்கிலாந்தை 286 ரன்களில் சுருட்டினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ஹாரி ப்ரூக் ஸ்லிப்பில் ஒரு கேட்சை பிடித்தார். ஆனால் பின்னர் ட்ராவிஸ் ஹெட் 99 ரன்களில் இருந்தபோது, கல்லி திசையில் வந்த கடினமான கேட்சை ப்ரூக் தவறவிட்டார். இது இங்கிலாந்துக்கு பேரிடியாக அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஹெட், சதமடித்து அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.
இங்கிலாந்துக்கு மற்றொரு பின்னடைவாக, முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் பேட்டிங் செய்த களைப்பு மற்றும் 40 டிகிரி வெயில் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. இது இங்கிலாந்து பந்துவீச்சை மேலும் பலவீனப்படுத்தியது.
ஆஸ்திரேலியா மூன்றாம் நாள் முடிவில் 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கையில் இன்னும் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா நாளை மேலும் ரன்களை குவித்து இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வென்றால் அல்லது டிரா செய்தால் கூட ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசமே தங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.