மரண அடி அடித்த உலகக்கோப்பை நாயகன்.. அரண்டு போன இங்கிலாந்து.. 69 பந்தில் செஞ்சுரி.. ஆஷஸ் டெஸ்ட்
பெர்த்: 2025 ஆஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் ஆடிய அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணியை மிரள வைத்தது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே ஆட்டத்தின் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 200 ரன்களை தொட முடியாமல் திணறி வந்த நிலையில், நான்காவது இன்னிங்ஸில் 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி ஆடியது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 172 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 132 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 205 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் 200 ரன்கள் எட்டப்படாததால், ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் தான், அந்த அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது.
துவக்க வீரர் உஸ்மான் கவாஜா முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால், அவருக்குப் பதிலாக ட்ராவிஸ் ஹெட் துவக்க வீரராக அனுப்பப்பட்டார். டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் ட்ராவிஸ் ஹெட், இந்த முறை டி20 மற்றும் ஒருநாள் அணியைப் போலவே துவக்க வீரராகக் களம் இறங்கினார்.
முதல் ஆறு ஓவர்கள் வரை நல்ல பிள்ளையாக நிதானமாக ரன் சேர்த்த ட்ராவிஸ் ஹெட், ஏழாவது ஓவரிலிருந்து தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினார்.
முதல் இன்னிங்ஸில் ஆறு ஓவர்களில் ஐந்து விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச வந்தபோது, அவரது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து மிரட்டினார் ட்ராவிஸ் ஹெட். வெறும் 36 பந்துகளில் ட்ராவிஸ் ஹெட் அரை சதத்தைக் கடந்தார். இது ஆஷஸ் வரலாற்றிலேயே ஐந்தாவது அதிவேக அரை சதமாக அமைந்தது.
அதன் பிறகும் தனது அதிரடியை ட்ராவிஸ் ஹெட் மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடி அவர் நான்கு சிக்ஸர்களை அடித்திருந்தார். ஆஷஸ் வரலாற்றிலேயே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் துவக்க வீரர் என்ற சாதனையையும் செய்தார்.
அதன் பிறகு, வெறும் 69 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து அணியை நிலை குலைய வைத்தார். ஆஸ்திரேலிய அணி 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது, அதில் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 100 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்தார். 69 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் ஆஷஸ் வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக சதத்தை அடித்திருந்தார் ட்ராவிஸ் ஹெட்.
ஆட்டம் கைநழுவி போனதைப் பார்த்து இங்கிலாந்து அணி நொந்து போனது. போட்டி நடைபெற்று வரும் பெர்த் ஆடுகளத்தில் ஓவருக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்தாலே பெரிய சாதனை என நினைத்திருந்த போது, ட்ராவிஸ் ஹெட் அதிரடியால் ஆஸ்திரேலியா ஓவருக்கு 6.5 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்தது.


Click it and Unblock the Notifications