லண்டன் : பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உலகின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 66 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். முதல் டெஸ்டில் சதம் அடித்த உஸ்மான் கவாஜா இன்றைய ஆட்டத்தில் வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

உலகின் முதல் நிலை வீரரான மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் ஸ்மித் ஜோடி இணைந்து ஆஸ்திரேலிய அணியின் ரன்களை உயர்த்தினர். இதில் மார்னஸ் லாபஸ்சேன் 93 பந்துகளை எதிர் கொண்டு 47 ரன்கள் சேர்த்து அரை சதத்தை தவறவிட்டார். இதனை அடுத்து ஸ்மித்தும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவின் ரன்களை உயர்த்தி வருகிறார். வழக்கம் போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் 102 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஸ்மித் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.அதாவது கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து நான்கு முறை 50 ரன்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
இதேபோன்று கடந்த 23 ஆண்டுகளில் இத்தகைய சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் ஸ்மித் பெற்றிருக்கிறார். கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் ரிக்கி பாண்டிங் கூட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்போது ஸ்மித் மட்டும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த சாதனையின் நிகழ்த்தி இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே வென்ற நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்டிலும் வலுவான நிலையில் இருக்கிறது.