ஓவர் த்ரோ ரன்னா? இருக்கட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து
Recommended Video
லண்டன்: ஓவர் த்ரோ ரன் கூடுதலாக வழங்கப்பட்டாலும் உலக கோப்பையில் நாங்கள் தான் சாம்பியன் என்று இங்கிலாந்து அணியின் இயக்குநர் ஆஷ்லே ஜைல்ஸ் கூறியிருக்கிறார்.
உலக கோப்பைப் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. எனினும், அந்த வெற்றியில் புதிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டது.
இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில், கடைசி ஓவரின் 4வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மார்டின் குப்தில் பீல்டிங் செய்தார். 2 ரன்களை எடுக்க முயன்றார் ஸ்டோக்ஸ். 2வது ரன்னை ஓடி முடிக்கும்போது குப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பந்து, எல்லைக்கோட்டை தாண்டிச் சென்றது.

ஆட்டத்தை மாற்றிய முடிவு
அதனால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் ஓவர் த்ரோ என்று வழங்கப்பட்டன. அதாவது பவுண்டரி 4 ரன்கள், ஓடி எடுத்தது 2 ரன்கள். பரபரப்பான கட்டத்தில் நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே முற்றிலும் மாற்றியது. அதன் பிறகு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என நிலைமை அடியோடு மாறியது.

5 ஓவர் த்ரோ ரன்கள்
இங்கிலாந்து ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் வென்று உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அந்த 6 ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன. இங்கிலாந்துக்கு 5 ஓவர் த்ரோ ரன்கள் மட்டுமே வழங்கியிருக்கவேண்டும் என்று முன்னாள் நடுவர் சைமன் டாபல் தெரிவித்துள்ளார்.

முடிவில் தவறு
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: முடிவெடுப்பதில் ஏற்பட்ட தவறு. பரபரப்பான கட்டத்தில் பீல்டர் த்ரோ வீச முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார்.

50வது ஓவர்
ஆனால் டிவி ரீப்ளேயில் வேறொரு காட்சி வந்தது. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அடில் ரஷித் தான் 5-வது பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும். எனினும் இந்தத் தவறால் தான் நியூசிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது என்று கூறக்கூடாது என்றார்.

ஓவர் த்ரோ ரன்
இந் நிலையில், ஓவர் த்ரோ ரன் கூடுதலாக வழங்கப்பட்டாலும் உலக கோப்பையை தக்கவைத்து கொள்வதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ஆஸ்லே ஜைல்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: போல்ட் வீசிய கடைசி பந்து லெக் ஸ்டம்ப் பக்கம் புல்டாஸாக அமைந்தது.

நாங்க சாம்பியன்
2 ரன்கள் மட்டுமே போதாது என்றிருந்தால் அந்த பந்தை ஸ்டோக்ஸ், சிக்சருக்கு விரட்டி இருப்பார். நாங்கள் தான் உலக சாம்பியன். எங்களிடம் தான் இப்போது உலக கோப்பை உள்ளது. அதை நாங்கள் தக்க வைத்துக்கொள்வோம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications