சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென விலகியதற்கான காரணம் குறித்து அவரின் மனைவி பிரீத்தி நாராயணன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நாளை தரம்சாலா மைதானத்தில் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறவுள்ளார்.

இதனிடையே ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால் அன்றைய ஆட்டத்தின் முடிவிலேயே அஸ்வின் திடீரென ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியோடு விலகுவதாக அறிவிக்கப்பட்டது. தாயின் உடல்நிலை மோசமாகியதால், அவசர அவசரமாக அஸ்வின் சென்னை திரும்பினார்.
பின்னர் மீண்டும் 4வது நாளின் உணவு இடைவேளையின் போது இந்திய அணியுடன் அஸ்வின் மீண்டும் இணைந்தார். தாயின் உடல்நிலை மோசமாகியதால், 500வது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கூட அஸ்வினால் கொண்டாட முடியாமல் போனது. இதுகுறித்து அஸ்வின் வெளிப்படையாக எங்குமே பேசவில்லை.
தற்போது அஸ்வினின் மனைவி பிரீத்தி நாராயணன் அளித்துள்ள பேட்டியின் மூலம் சில விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அதில், அஸ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்திய பின் பலரும் செல்ஃபோனில் அழைத்து வாழ்த்து கூறினார்கள். எங்களின் இரு மகள்களும் பள்ளியில் இருந்து வந்து அஸ்வின் சாதனையை பார்த்து கொண்டாடி வந்தார்கள்.
அப்போது தான் எனது மாமியார் திடீரென கொலாப்ஸ் ஆகி கீழே விழுந்தார்கள். அடுத்த சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் இருந்தோம். அப்போது அம்மாவின் உடல்நிலை விவகாரம் குறித்து அஸ்வினுக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். ஏனென்றால் ராஜ்கோட் - சென்னை இடையில் நல்ல விமானம் சேவை கிடையாது.
அதன்பின் நான் நேரடியாக புஜாரா மற்றும் அவரின் மனைவியின் உதவியை நாடினேன். அவர்கள் உடனடியாக தேவையான உதவிகளை செய்ய முன் வந்தனர். ராஜ்கோட்டில் இருந்து எப்படி சென்னை வர முடியும் என்பதை வழியை ஆராய்ந்து முடிவு செய்தோம். அதன்பின்னரே நான் அஸ்வினுக்கு செல்ஃபோனில் அழைத்தேன். ஏனென்றால் மருத்துவர்கள் அஸ்வினை இங்கு வரவழைப்பது நல்லது என்று கூறினார்கள்.
நான் அவரிடம் இந்த விஷயத்தை கூறிய பின், அஸ்வின் மொத்தமாக உடைந்துவிட்டார். செல்ஃபோனில் பேச முடியாமல் சில நிமிடங்கள் கீழே வைத்துவிட்டார். அதன்பின் மீண்டும் எனக்கு அழைத்தார். அந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், பிசிசிஐ அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர் சென்னை வந்து சேரும் வரை அனைவருமே எங்களுடன் பேசினார்கள்.
அம்மா ஐசியூவில் இருந்த போது அஸ்வின் எமோஷனலாக இருந்தார். அதன்பின் 2 நாளில் அம்மாவின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் கண்ட போது, நாங்கள் அனைவருமே அஸ்வினை மீண்டும் செல்லுமாறு அறிவுறுத்தினோம். ஏனென்றால் ஒரு ஆட்டத்தில் இருந்து எந்த சூழலிலும் பாதியோடு அஸ்வின் வந்ததே கிடையாது. இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் இன்னும் சோகமாக இருப்பார். அதனால் அனுப்பினோம் என்று கூறியுள்ளார்.