இந்தியாவை காப்பாற்றிய அஸ்வின்.. 2வது டெஸ்ட்..தோல்வி விளிம்புக்கு சென்று த்ரில் வெற்றி பெற்றது எப்படி
டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்புக்கு சென்ற இந்திய அணி கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் - அஸ்வின் நடத்திய போராட்டத்தால் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளும் மோதிய 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்-ன் சிறப்பான ஆட்டத்தால் 314 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

குறைவான இலக்கு
87 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி இந்த முறையும் பேட்டிங்கில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் அக்ஷரின் சுழலில் சிக்கி 231 ரன்களை மட்டுமே எடுத்தது. ஏற்கனவே 87 ரன்கள் முன்னிலையுடன் இருந்த இந்திய அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதிர்ச்சி தந்த இந்தியா
மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தனர். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக பிட்ச் ஆனதால் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. ஓப்பனிங் வீரர்கள் சுப்மன் கில் 7 ரன்களுக்கும் கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன்களுக்கும் நடையை கட்டினர். இதன் பின்னர் களமிறங்கிய சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாரா 6 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டாகினார்.

சரிந்த மிடில் ஆர்டர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய விராட் கோலி, 22 பந்துகளை சந்தித்து 1 ரன்னுக்கு மட்டும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்திய அணி 37 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை பறிகொடுத்து திணறியது. அக்ஷர் பட்டேல் ஒருபுறம் சீரான வேகத்தில் ரன்களை குவிக்க, மறுபுறம் விக்கெட்கள் சரிந்துக்கொண்டே இருந்தது. அவரும் 34 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

பண்ட் தந்த ஏமாற்றம்
ஒருகட்டத்தில் இந்த களம் இனி அதிரடியாக ஆடுபவருக்கே உதவும் என ரிஷப் பண்ட் மீது அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவரும் கைக்கொடுக்கவில்லை. பண்ட் 9 ரன்கள், ஜெய்தேவ் உனத்கட் 13 ரன்கள் என சரிந்தனர். இதனால் 74 ரன்களுக்கெல்லாம் 7 விக்கெட்கள் சரிந்து இந்திய அணி தோற்றேவிடும் என்ற கவலைக்கு சென்றுவிட்டது.

காப்பாற்றிய அஸ்வின்
அப்போது ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நாங்கள் இருக்கிறோம் என சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். வங்கதேசம் போட்ட கடுமையான பந்துவீச்சையும் அசால்ட்டாக சமாளித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 46 பந்துகளில் 29 ரன்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களையும் அடிக்க, இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாதனை தக்கவைப்பு
2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியே பெற்றதில்லை என்ற பெருமையையும் இந்தியா தக்கவைத்துக்கொண்டுள்ளது. மற்றொருபுறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications