பிரிஸ்பேன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுவதாக அஸ்வின் தன்னிடம் கூறிய போது எமோஷனலாகிவிட்டதாக இந்திய வீரர் விராட் கோலி பதிவிட்டுள்ளார். அஸ்வினுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்ததாக கூறியுள்ள விராட் கோலி, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நினைவு கூரப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்த போது, நன்றி கூறிய 4 பெயர்களில் விராட் கோலியின் பெயரும் ஒன்று. அதேபோல் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கிய போது, மீண்டும் கனமழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அஸ்வின் மற்றும் விராட் கோலி இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதன்பின் திடீரென அஸ்வினை கட்டியணைத்து விராட் கோலி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அதன்பின் அஸ்வினின் தோள்களில் நீண்ட நேரம் விராட் கோலி கைகளை போட்டபடியே உரையாடிக் கொண்டிருந்தார். ஏனென்றால் தோனியின் தலைமைக்கு கீழ் அஸ்வின் அறிமுகமாகி இருந்தாலும், விராட் கோலியின் கேப்டன்சிக்கு கீழ் தான் உச்சத்தை எட்டினார்.
அதிலும் 2018ஆம் ஆண்டுக்கு பின் அஸ்வினின் பேட்டிங் அடுத்த லெவல் சென்றதற்கு விராட் கோலி மிக முக்கியமான காரணமாக அமைந்தார். இந்த நிலையில் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், விராட் கோலி அவருக்காக ஒரு அழகான பதிவை எழுதி இருக்கிறார். அதில், உங்களுடன் 14 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் அஸ்வின்.. இன்று நீங்கள் ஓய்வு பெறுவதாக கூறிய போது, கொஞ்சம் எமோஷனலாக உணர்ந்தேன்.
அப்போது நாம் இணைந்து விளையாடிய நாட்கள் ஒரு ஃபிளாஷ்பேக்கை போல் மனதில் வந்து சென்றது. உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும், இந்த 14 ஆண்டு கால பயணத்தையும் ரசித்திருக்கிறேன் அஸ்வின்.. உங்களின் திறமையும், இந்திய அணியின் வெற்றிக்காக நீங்கள் செய்துள்ள பங்களிப்பும் யாருக்கும் குறைந்தது அல்ல. இந்திய அணியின் ஜாம்பவானாக என்றும் நினைவு கூரப்படுவீர்கள்.
வாழ்க்கையில் உங்களின் அடுத்தக் கட்ட பயணத்திற்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். உங்கள் மீது எப்போதும் அதிகளவிலான மரியாதை இருந்துள்ளது. அந்த மரியாதையுடன் அன்பையும் என்னுடைய நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.