லண்டன் : அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் அவர் ஆட மாட்டார் என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு பதில் யார் ஆடுவார்கள், அணியில் வேறு என்ன மாற்றம் செய்யப்படும் என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, இங்கிலாந்து இடையே ஆன டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. எனினும், இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது. அதில் இந்தியா வென்று ஆறுதலடையலாம். எனினும், இந்தியா புதிய வீரர்களைக் கொண்டு பரிசோதனை முயற்சிகள் செய்யுமா? என்ற யூகமும் உள்ளது.

அஸ்வின் மூன்றாம் போட்டியின் போதே காயம் அடைந்தார். எனினும், அது பெரிய அளவில் இல்லாத காரணத்தால், நான்காம் போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில் அஸ்வின் மீண்டும் நான்காம் போட்டியில் காயமுற்றதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், அவர் ஐந்தாம் போட்டியில் அணியில் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்குப் பதில் ஜடேஜா அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. ஜடேஜாவுக்கு இந்த தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, அவருக்கு சுழல் பந்துவீச்சாளர் என்ற வகையில் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்திய அணியின் துவக்க வீரராக இரண்டு போட்டிகளில் ஆடிய ராகுல் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அடுத்த போட்டியில் அவருக்கு பதில், இளம் வீரரான ப்ரித்வி ஷா இடம் பிடிப்பார் என்ற தகவலும் அடிபடுகிறது. ப்ரித்வி ஷா தனித்துவமான முறையில் ஆடி வருகிறார். முதல் தர போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்துள்ளார்.
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் யாரும் சரியாக செயல்படாத நிலையில், ப்ரித்வி ஷா அந்த நிலையை மாற்றுவாரா என பார்க்கலாம்.