சச்சின், பிராட்மேனுக்கும் காயம் வந்திருக்கு.. விமர்சனம் செய்தவர்களை குத்திக் காட்டி பேசிய அஸ்வின்!
Recommended Video

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் காயத்தில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
அஸ்வின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது காயம் ஏற்பட்டு கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்கவில்லை. அது அப்போது அவர் உடற்தகுதி மீது விமர்சனத்தை எழுப்பியது. அது பற்றி தற்போது அஸ்வின் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஸ்வின் தொடர்ந்து காயம்
அஸ்வின் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் மூன்று போட்டிகளில் ஆடவில்லை. அதற்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பாதியில் காயம் ஏற்பட்டதால், சில போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

அஸ்வின் மீது விமர்சனம்
அஸ்வின் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் காயத்துக்கு உள்ளாவது விமர்சனம் செய்யப்பட்டது. அஸ்வின் குறித்து கேப்டன் கோலியே வெளிப்படையாக காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இதை தடுக்க முடியாது
இந்நிலையில், அஸ்வின் தற்போது காயத்தில் இருந்து குணமாகி தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில் நடைபெறும் லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். அவர் ஒரு வீரருக்கு காயம் வருவதை தடுக்க முடியாது என தன் காயம் குறித்து பேசினார்.

காயம் யாரையும் விடாது
மேலும், "காயம் சச்சினையும் விடவில்லை, டான் பிராட்மேனையும் விடவில்லை. எதிர்காலத்தில் அது மற்ற வீரர்களையும் விடாது. எப்போது நான் ஃபிட்னெஸ் அல்லது யோ-யோ தேர்வுகளில் பங்கேற்றாலும் அதில் முன்னிலையில் இருக்கிறேன். என் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறேன்" என கூறி தன் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு காயம் எல்லோருக்கும் வருவது தான் என சுட்டிக் காட்டினார்.

அதிக உள்ளூர் போட்டிகள்
தற்போது தமிழக அளவிலான லீக் போட்டியில் ஆடிய அஸ்வின் அதில் 40 ஓவர்கள் வரை வீசியுள்ளார். தான் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி வருவதால், அதற்கு தன்னை தயார்படுத்த அதிக உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் எனவும் கூறினார்.

இந்திய அணியில் இனி எப்போது?
அஸ்வின் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வரும் நிலையில், உலகக்கோப்பை முடியும் வரை அவரை இந்திய அணியில் காண முடியாது. உலகக்கோப்பைக்கு பின் நடக்கும் டெஸ்ட் தொடரில் தான் அஸ்வின் மீண்டும் இந்திய அணிக்கு ஆட வாய்ப்புள்ளது. ஆனால், இடையே ஐபிஎல் தொடரில் அஸ்வின் பங்கேற்பார்.


Click it and Unblock the Notifications