தரம்சாலா: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக வென்றது. ஒருநாள் தொடர் நாளை மறுநாள் 16ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய இந்தியா, ஒருநாள் தொடரில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் கேப்டன் டோணியின் தலைமீது பாரம் ஏற்றப்பட்டுள்ளது.

ஏனெனில், அஸ்வின், முகமது ஷமி ஆகிய இரு முன்னணி பவுலர்களுக்கும், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் பட்டம் வென்ற அஸ்வின் இல்லாமல் களமிறங்கும் அணிக்கு தலைமையேற்பது டோணிக்கு கடும் சவாலாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமின்றி, டோணியின் வலதுகரம் போல செயல்படும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. அஸ்வின், ஷமி மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும்தான், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வெல்ல உறுதுணையாக இருந்தவர்களாகும்.
ஜெயந்த் யாதவ் ஆப்-ஸ்பின்னராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஹர்பஜனை, அஸ்வினுக்கு பதிலாக களமிறக்க முதலில் திட்டமிட்டிருந்த அணி நிர்வாகம், இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ஜெயந்த் யாதவை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோஹ்லியா, டோணியா என பட்டிமன்றம் நடத்தும் ரசிகர்களின் வாய்க்கு அவல் கொடுத்துவிடாமல் இருக்க டோணி அணி மிகவும் பிரயத்தனப்பட வேண்டியது அவசியம்.