ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு.. முன்பே கணித்திருந்தேன்.. நெகிழ்ச்சியில் அஸ்வின் சொன்ன வார்த்தை!
சென்னை: ராபின் உத்தப்பா மற்றும் அம்பாதி ராயுடு இருவரும் நிச்சயமாக ஏதோ ஒரு அணிக்கு பயிற்சியாளர்களாக செல்வார் என்று கணித்திருந்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அதற்கேற்ப ராபின் உத்தப்பா மும்பை அணியுடன் இணைந்துள்ளதாகவும், ராயுடு ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது மும்பை அணிக்காக விளையாடியவர் ராபின் உத்தப்பா. இதன்பின் ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுக்காக விளையாடி மிகப்பெரிய ரன் மெஷினாக உருவெடுத்தார். கடைசியாக சிஎஸ்கே அணிக்கு வந்து கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்.

இதனால் சிஎஸ்கே அணியுடன் உத்தப்பா ஒரு எமோஷனலாக ஒன்றிணைந்து இருந்தார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து வர்ணனை பணிகளில் தீவிரமாக இயங்கி வந்த உத்தப்பா, திடீரென மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவருக்கு சிஎஸ்கே ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராபின் உத்தப்பா நியமனம் தொடர்பாக அஸ்வின் பேசுகையில், ராபின் உத்தப்பா சர்வதேச கிரிக்கெட்டில் வேறு எங்கோ ஒரு உயரத்திற்கு சென்றிருக்க வேண்டும். அவ்வளவு திறமையான ஒரு வீரர். ஆனால் நான் எதிர்பார்த்த அளவிற்கு உத்தப்பா செல்லவில்லை. ஆனால் பயிற்சியாளராக புதிய இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறது.
இதில் ராபின் உத்தப்பா நிச்சயம் பெரிதாக வர வேண்டும். தொடக்க முதலே ராபின் உத்தப்பா மற்றும் அம்பாதி ராயுடு இருவரும் ஏதோ ஒரு அணிக்கு பயிற்சியாளராக செல்வார்கள் என்று கணித்திருந்தேன். ராபின் உத்தப்பா மும்பையுடன் இணைந்துவிட்டார். ராயுடு எந்த அணிக்கும் செல்லவில்லை. ஆனாலும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய அதிகாரத்துடன் இருக்கிறார்.
ராபின் உத்தப்பாவின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், நேருக்கு நேராக கருத்தை சொல்வார். நிர்வாகத்துடன் சரியான தகவலை பரிமாறுவதில் தெளிவாக இருப்பார். ஒளிவு மறைவு இன்றி செயல்பட கூடியவர். டெக்னிக்கலாகவும், மனதளவிலும் சரியாக சிந்தித்து பேசக் கூடிய திறமை உத்தப்பாவிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
