“அசிங்கப்பட்ட பின் ஏன் நான் பந்துவீசனும்”.. ஆடம் சாம்பாவின் மன்கட் பிரச்சினை..அஸ்வின் கடும் விளாசல்
சென்னை: பவுலர்களை அசிங்கப்படுத்தும் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக எதற்காக விளையாடி வெற்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ரவிச்சந்திரன் அஸ்வினை சுற்றி வந்த மன்கட் முறை விக்கெட் பிரச்சினைகள் தற்போது ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் வரை சென்றுவிட்டது. அதற்கும் அஸ்வின் தான் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பேஷ் லீக் தொடரான விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தான் சர்ச்சையே கிளம்பியது.

ஆடம் சாம்பா விக்கெட்
மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடம் சாம்பா பந்துவீசுவதற்கு முன்னதாகவே பேட்ஸ்மேன் ரோஜர்ஸ் கிரீஸை விட்டு வெளியேறினார். இதனால் அவர் உடனடியாக மன்கட் ரன் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இதில் முடிவெடுக்க முடியாமல் இருந்த கள நடுவர்கள் 3வது நடுவருக்கு அப்பீல் செய்தனர். ஆனால் இறுதியில் நாட் அவுட் என முடிவு வந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.

என்ன காரணம்
ஒரு பவுலர் பந்துவீச முழுமையாக செய்கைகளை செய்துவிட்டு, பந்தை ரிலீஸ் செய்யாமல் போனால் அந்த பந்து செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் பந்துவீசப்படும். அதே போல ஆடம் சாம்பா அரை வட்ட அளவிற்கு கையை ஓங்கிவிட்டு, அதன் பின் தான் ஸ்டம்பிங் செய்தார். எனவே இதனை ரன் அவுட்டாக ஏற்க முடியாது என அறிவித்தனர்.

அஸ்வின் தந்த பதிலடி
இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் பேசியுள்ளார். அதில், மன்கட் குறித்து பேசி நான் சோர்ந்துவிட்டேன். ஆனால் இந்த சம்பவத்தில் எனக்கு ஒரே ஒரு விஷயம் பிடித்திருந்தது. பேட்ஸ்மேனுக்கு பெரும் அச்சத்தை சாம்பா காட்டிவிட்டார். எந்தவித வார்த்தையும் சாம்பா அவரிடம் பேசவில்லை, ஆனால் தாம் அவுட்டா ? இல்லையா ? என புரியாமல் பேட்ஸ்மேன் பதற்றத்தில் ஆழ்ந்துவிட்டார். இதுதான் சிறப்பம்சமாகும்.

மைக்கேல் ஹசிக்கு பதில்
தொடர்ந்து பேசிய அஸ்வின் மைக்கேல் ஹசியின் கருத்துக்கும் பதிலடி தந்தார். இதுகுறித்து பேசியிருந்த ஹசி, அவுட் கொடுப்பதற்கு பதிலாக, அவுட் கோரிய முறையீட்டை கேப்டனும், கோச்-ம் திரும்பப்பெற்றிருக்கலாம். அதுதான் நல்லது எனக்கூறினார். இதற்கு பதில் தந்துள்ள அஸ்வின் அப்பீல் செய்ததை திரும்ப பெறுவதை விட வேறு அசிங்கம் இருக்க முடியாது.

அசிங்கம் ஏன்?
ஒரு பவுலர் எதற்காக முறையிடக்கூடாது எனக்கூற வேண்டும். நான் ஸ்ட்ரைக்கரை ஒரு பவுலர் அவுட்டாக்கிவிட்டால், அது சரியாக? இல்லையா? என கேப்டன் கூறிக்கொண்டு இருந்தால் அது பவுலருக்கு செய்யும் தவறு ஆகும். ஒரு பவுலராக நான் அவுட் கேட்கும் போது, அதனை கேப்டனும், பயிற்சியாளரும் ஏற்க மறுத்து வாபஸ் பெற்றால், பின்னர் நான் ஏன் ஆட வேண்டும். எனக்கு ஆதரவு கொடுக்காதவர்களுக்காக நான் ஏன் பந்துவீசி வெற்றி பெற்றுக்கொடுக்க வேண்டும்? என அஸ்வின் சரமாரி கேள்வியை கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications