சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரின் தாய், தந்தை மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீருடன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 3,503 ரன்கள், 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 116 போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மேட்ச் வின்னராக அஸ்வின் ஓய்வையடுத்து, அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே ரசிகர்கள் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முறையான ஃபேர்வெல் மேட்ச் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அதேபோல் அஸ்வின் ஓய்வை அறிவித்த பின் எப்போது சொந்த ஊர் திரும்புவார் என்ற கேள்வி இருந்தது. இதற்கு அஸ்வின் தனது ஓய்வறை உரையிலேயே பதில் அளித்திருந்தார். அதில் கூறியதை போல், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் ஒன்று சேர்ந்து வாழ்த்து கூறி வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அஸ்வினுக்கு, "நீ பொட்டு வச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்" என்று ட்ரம்ஸ் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவரின் மனைவி பிரீத்தி நாராயணன் மற்றும் 2 மகள்களும் வரவேற்றனர். தொடர்ந்து அஸ்வின் தந்தை மற்றும் தாய் இருவரும் ஆனந்த கண்ணீருடன் கட்டியணைத்து வரவேற்றனர்.
அதேபோல் வீட்டிற்கு அருகில் இருந்த பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துகளை கூறி வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அஸ்வின் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றாலும், அடுத்த 3 மாதங்களுக்கு என்ன செய்வார் என்பதே கேள்வியாக உள்ளது.
அவருடன் நெருங்கிய தொடரில் உள்ள பலரும் அஸ்வின் அடுத்ததாக உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவார் என்று கூறி வருகின்றனர். ஆனால் அஸ்வினின் நண்பரும், அனலிஸ்டுமான பிரசன்னா, அஸ்வின் விரைவில் பயிற்சியாளராக செயல்பட தொடங்குவார் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அஸ்வினின் அடுத்தக்கட்ட பணிகள் என்னவாக இருக்கும் என்ற விவாதமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அஸ்வின் பேசுகையில், 2011 உலகக்கோப்பைக்கு பின் மீண்டும் இப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளேன். சென்னை அணிக்காக நீண்ட காலம் ஆடினாலும் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அஸ்வின் என்ற கிரிக்கெட்டரின் பயணம் முடியவில்லை. அஸ்வின் என்ற இந்திய கிரிக்கெட்டரின் பயணமே முடிவுக்கு வந்துள்ளது.
ஓய்வை அறிவித்தது எனக்கு பெரிதாக எமோஷனலாக இருக்கவில்லை. என்னை சுற்றியுள்ளவர்களுக்கு எமோஷனலாக இருந்திருக்கும். ஆனால் அது சில நாட்களில் சரியாகும். என்னை பொறுத்தவரை இந்த அறிவிப்பு எனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஓய்வு குறித்த முடிவு கடந்த சில மாதங்களாகவே மனதில் இருந்தது.
இதன்பின் பிரிஸ்பேன் டெஸ்டின் 4வது நாளில் முடிவு செய்து, கடைசி நாளில் அறிவித்துவிட்டேன். கடந்த 2 ஆண்டுகளாகவே இரவில் கிரிக்கெட் பற்றிய சிந்தனைகள் வரவில்லை. அதுவே எனக்கு அடுத்த பயணத்தை தொடங்குவதற்கான அறிகுறியாக இருந்தது. அடுத்த சில நாட்கள் கொஞ்சம் பயிற்சி இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.