பிரிஸ்பேன்: இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட ஃபேர்வெல் போட்டியை போல் இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ அளித்திருத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அந்தந்த அணிகளுக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடும் வீரர்களுக்கு ஃபேர்வெல் டெஸ்டில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி அளிக்கும். சில நாட்களுக்கு முன்பாக கூட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பாக டிம் சவுதிக்கு மறக்க முடியாத ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்து அசத்தியது.

ஆனால் பிசிசிஐ நிர்வாகத்தை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரைத் தவிர்த்து வேறு எந்த வீரருக்கும் சரியான ஃபேர்வெல் போட்டிக்கு ஏற்பாடு செய்தது கூட இல்லை. சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சேவாக் என்று இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடிய ஜாம்பவான்களுக்கு சரியான ஃபேர்வெல் போட்டிகளை அமைத்து அவர்களை கொண்டாடும் வகையில் பிசிசிஐ ஏற்பாடு செய்ததில்லை.
இந்த சம்பவம் இந்திய ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் பாதியிலேயே ஓய்வை அறிவித்து, ரவிச்சந்திரன் அஸ்வின் நாடு திரும்ப வேண்டிய சூழலுக்கு பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தள்ளியுள்ளது. அவருக்கான ஃபேர்வெல் போட்டி என்று கூட எந்தப் போட்டியும் அமையவில்லை.
இந்த விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எப்போதும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின், அவரின் ஃபேவரைட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு ஏற்பாடு செய்ததோடு, 6 மாதங்களுக்கு முன்பே என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது.
ஜேம்ஸ் ஆண்டர்சனின் குடும்பத்தினரை அழைத்து அவரின் மகள்களின் மூலம் பெல் அடித்து ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்தப் போட்டி முடிவடைந்த பின் லார்ட்ஸ் பால்கனியில் தேநீர் கோப்பையுடன் ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து ஆண்டர்சன் விலகினார். ஆனால் ஆண்டர்சனை போலவே இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை அஸ்வின் செய்திருக்கிறார்.
அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்து பிரியாவிடை கொடுத்திருந்தால், அவரின் வாழ்க்கையிலும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து முன்னேறும் வழக்கம் கொண்டுள்ள பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு மரியாதை கொடுக்காது என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.