எங்க கிட்ட இருக்காரே புல்லட்டு பாண்டி.. அவர் எப்படி.. ஐசிசியை தெறிக்க விட்ட அஸ்வின்!
சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எதார்த்தமாக ஒரு கேள்வி கேட்கப் போக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அதற்கு அதிரடியாக ஒரு பதிலைப் போட.. இப்போது டிவிட்டரே கலங்கிப் போய் விட்டது. வழக்கம் போல இதிலும் நம்ம நாயகன் வைகைப் புயல் வடிவேலுதான்.
Recommended Video
Who is the one player from another sport you think would've made a good cricketer? இதுதாங்க ஐசிசி கேட்ட கேள்வி. அதாவது கிரிக்கெட்டர் அல்லாத வேறு ஒரு விளையாட்டைச் சேர்ந்த வீரர் ஒரு வேளை கிரிக்கெட் ஆட வந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பார் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள் என்று கேட்டிருந்தது ஐசிசி.
உடனே பதிலைப் போட்டார் அஸ்வின். அவர் போட்ட பதில்தான் அதிரடியானது. செம காமெடியானது. அவர் போட்டது.. கோவில் படத்தில் நடித்த வைகைப் புயல் வடிவேலுவின் படம்தான். பிறகென்ன டிவிட்டரே பற்றிக் கொண்டு விட்டது.
ஐசிசி கேட்ட கேள்வி
உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை முடக்கி விட்டுள்ளது கொரோனாவைரஸ். இதனால் வீரர்களும் வீராங்கனைகளும் சமூக வலைதளங்களில் ஏதாவது பேசிக் கொண்டுள்ளனர். படம் போடுகின்றனர். சமைக்கின்றனர் முடி வெட்டுகின்றனர். குழந்தைகளை கொஞ்சுகின்றனர். பழைய நினைவுகளில் மூழ்குகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஐசிசியும் சேர்ந்துள்ளது. அதுவும் பாவம் எவ்வளவு நாளைக்குத்தான் சும்மா உட்கார்ந்திருக்கும்.
வேறு ஒரு வீரரைச் சொல்லுங்க
அந்த வகையில் ஐசிசி கேட்ட கேள்விதான் கிரிக்கெட் அல்லாத வேறு துறையைச் சேர்ந்தவர் கிரிக்கெட் ஆட வந்தால் எப்படி இருக்கும் என்பது. அதற்கு ஸ்பின்னர் அஸ்வின் அதிரடி பதிலைப் போட்டுள்ளார். அவர் போட்ட பதில் இதுதான்- கோவில் படத்தில் வரும் புல்லட் பாண்டி எப்படி.. நீங்களும் சொல்லுங்க உங்களுக்குப் பிடிச்ச இன்னொரு திறமையாளரை என்று ரசிகர்களையும் கோர்த்து விட்டு விட்டார். பிறகென்ன கிளம்பி விட்டனர் ரசிகர்கள்.
அஸ்வின் போட்ட காமெடி பதில்
ஆனால் அஸ்வினே இன்னொரு பதிலையும் போட்டுள்ளார். அதாவது வெண்ணிலா கபடிக் குழு படத்தில் கபடி வீரராக நடித்த விஷ்ணுவிஷால் ஸ்டில்லைப் போட்டு இவர் மாதிரியும் இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதற்கும் தற்போது பதில்கள் குவிந்து கொண்டுள்ளன. இதையெல்லாம் பார்த்தால் ரசிகர்கள் ரொம்பவே காய்ந்து போய்க் கிடப்பதை உணர முடிகிறது.
பிகிள் விஜய் எப்படி?
பிகிளே.. இது ஒரு விஜய் ரசிகரின் பரிந்துரை. பிகிள் படத்தில் கால்பந்து கோச்சாக வருவார் விஜய். அந்த ஸ்டில்லைப் போட்டு இதெப்படி இருக்கு தலைவா என்று கேட்டுள்ளார். விஜய் ரசிகர்களும் இதற்கு விழுந்து விழுந்து கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர். இதே மாதிரி கில்லி உள்ளிட்ட வேறு சில விஜய் படங்களையும் பலர் பரிந்துரைத்துள்ளனர்.
நம்ம பப்லு எப்படி
இவர் பப்லுவைப் பரிந்துரைத்துள்ளார். ஜென்டில்மேன் படத்தில் வரும் காமெடிக் காட்சிதான் இது. கவுண்டமணி -செந்தில் இணைந்து பங்கேற்ற இந்த காமெடிக் கட்சிகளை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. டிக்கிலோனா உள்ளிட்ட பல கசமுசா விளையாட்டுக்களை இதில் ஆட விட்டிருப்பார் இயக்குநர் ஷங்கர். இதில் செந்தில் பெயர்தான் பப்லு. ஆனால் இதற்கு அஸ்வின்.. செல்லாது செல்லாது என்று செல்லமாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஈட்டி பட அதர்வா
ஈட்டி படத்தில் தடகள வீரராக வருவார் நடிகர் அதர்வா. அவரது ஸ்டில்லைப் போட்டு இவரை நீங்க மறந்துட்டீங்க அஸ்வின் என்று எடுத்துக் கொடுத்துள்ளார் மற்றொரு ரசிகர். அதற்கு அஸ்வின் கொடுத்த பதிலில், கண்டிப்பாக, ஒத்துக்கறேன் என்று தெரிவித்துள்ளார். உண்மையிலேயே இந்தப் படத்தில் அதர்வா நன்றாக நடித்திருப்பார்.
மார்க் வாக் பிரேம்ஜி
என் தலைவன் பிரேம்ஜி அமரனை மறந்துட்டீங்களே.. சீனுதான் விசாலாட்சி தோட்டத்தின் மார்க் வாக் என்று இவர் பிரேம்ஜிக்கு ஆதரவாக வந்து குதித்துள்ளார். ஆனால் இன்னும் அஸ்வின் இவருக்குப் பதில் கொடுக்காமல் உள்ளார். ஆனால் ஒரு கேட்ச் கூட பிடிக்காமல் எப்பப் பார்த்தாலும் கோட்டை விடும் சீனுவை அஸ்வின் ஆதரிப்பாரா என்றுதான் தெரியவில்லை.
இதை மறக்க முடியுமா?
இது லொச்சக் மச்சக் பச்சக்.. மறக்க முடியாது போக்கிரி பட காமெடி. விட்டால் விஜய்யை தூக்கி சாப்பிட்டிருப்பார் வடிவேலு இந்தப் படத்தில். அதுவும் இந்த லொச்சக் மச்சக் பச்சக் காட்சி வயிறு வெடிக்க சிரிக்க வைக்கும் குபீர் காமெடியாகும். இந்த காட்சியைப் போட்டுள்ளார் இவர். அதற்கு அஸ்வின். இது ஏற்றுக் கொள்ளப்பட்ட விளையாட்டா என்று சீரியஸாகவே கேட்டுள்ளார். ஐசிசி கேட்டது ஒரே ஒரு கேள்விதான். ஆனால் அஸ்வின் வந்து கேள்விகளை கிளறி விட்டு போய் விட்டார். இப்போது காமெடிக் காட்சிகள் குவிந்து கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications