ராஜ்கோட் : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படுவார் என்ற பேச்சு அதிகரித்துள்ள நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை எனக் அதற்கு நேர் மாறாக கூறி இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பந்துவீச்சில் அஸ்வின் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?

மாற்று வீரர் : முதலில் அறிவிக்கப்பட்ட உத்தேச இந்திய உலகக்கோப்பை அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அக்சர் பட்டேல், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ். இவர்களில் அக்சர் பட்டேலுக்கு ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டதால் அடுத்து நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அஸ்வின் அவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
அனுபவம் வேண்டும் : நீண்ட நாட்கள் ஒருநாள் போட்டியில் ஆடாத அஸ்வினை அணியில் தேர்வு செய்தது குறித்து பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அஸ்வினுடைய அனுபவம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றார். அப்போதே அஸ்வினுக்கு அணியில் இடம் உறுதி என்பதால் தான் டிராவிட் இப்படி சொல்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆரோன் பின்ச் என்ன சொன்னார்? : இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் அஸ்வினை அணியில் எடுப்பதே கடினம் என கூறி உள்ளார். "ஆஸ்திரேலிய தொடரில் ஆடும் மற்ற இந்திய வீரர்கள் நிச்சயம் அஸ்வினிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உலகக்கோப்பை அணியின் கடைசி 15 பேரில் ஒருவராக அஸ்வின் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் முக்கிய நேரங்களில் சிறப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் அணியின் ஆலோசகராக அறிவிக்கப்பட்டால் கூட நான் ஆச்சரியம் அடைய மாட்டேன்." என்றார் பின்ச்.
ஆலோசகர் மட்டும் தானா? : அஸ்வின் அனுபவம் அணிக்கு தேவை என டிராவிட் கூறி இருக்கும் நிலையில், ஆரோன் பின்ச் அதே விஷயத்தை மாற்றி அவர் ஆலோசகராக மட்டுமே இருக்கக் கூடும் என கூறி இருக்கிறார். ஒருவேளை இதுதான் உண்மை என்றால், இப்போது அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரில் ஆடுவது, அவரை உலகக்கோப்பை அணிக்குத் தேர்வு செய்வார்கள் என ரசிகர்கள் நம்பிக் கொண்டு இருப்பது எல்லாமே வீண் தானா?