
வங்கதேச சோகம்
வங்கதேச அணியில் முதல் போட்டியிலேயே தமிம் இக்பால் காயத்தில் வெளியேறினார். ஏற்கனவே, அந்த அணியில் தொடருக்கு முன்பாக சில வீரர்கள் காயத்தில் இருந்த நிலையில், இது மேலும் அழுத்தமாக அமைந்தது. இது மட்டுமில்லாமல், வங்கதேச அணி குரூப் சுற்று கடைசி போட்டியில் ஆப்கன் அணியை சந்தித்து விட்டு, அடுத்த நாளே, முக்கிய சுற்றான சூப்பர் 4-இல் இந்திய அணியை சந்தித்தது. இதனால், ஆப்கன் அணிக்கு எதிராக முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த அந்த அணி, அந்த போட்டியில் தோற்றதோடு மட்டுமில்லாமல், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதுவரை இந்த ஆசிய கோப்பையில், குரூப் சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக மட்டுமே வென்றுள்ளது வங்கதேசம்.

வங்கதேச அணியில் மாற்றம்
இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய மாற்றமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள சௌம்யா சர்க்கார் மற்றும் இம்ருல் காயேஸ் துவக்க வீரர்களாக இறங்குவார்கள் என தெரிகிறது. துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் இந்த ஆசிய கோப்பை தொடரில் சரியாக ஆடாததால், இன்றைய போட்டியில் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது. மற்ற வீரர்கள் அப்படியே தொடரவே அதிக வாய்ப்புள்ளது.

ஆப்கன் அணி எப்படி?
இந்த ஆசிய கோப்பை தொடரில் எதிர்பார்த்ததற்கு மேல் செயல்பட்டு வருகிறது ஆப்கானிஸ்தான் அணி. இலங்கை, வங்கதேச அணிகளை குரூப் சுற்றில் வீழ்த்தியது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவர் வரை "தண்ணி காட்டியது". அந்த போட்டியில் மட்டும் அனுபவம் வாய்ந்த ஷோயப் மாலிக் கடைசி வரை நிற்கவில்லை என்றால் பாகிஸ்தான் மண்ணை கவ்வி இருக்கும். ஆப்கன் அணியை பொறுத்தவரை சுழல் பந்துவீச்சு தான் அவர்கள் பலம். அதை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். அதே போல பேட்டிங்கில் தங்கள் பலவீனத்தை உணர்ந்து, முதல் 40 ஓவர்கள் வரை ஓவருக்கு 4 ரன்கள் எடுத்தால் போதும், கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்டலாம் என்ற தெளிவான திட்டத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இன்று தோற்றால்… முக்கிய போட்டி
இன்றைய ஆப்கன், வங்கதேச மோதல் மிகவும் முக்கியமானது. இதில் தோற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் இரண்டு அணிகளும் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால், இப்போதைக்கு ஆப்கானிஸ்தான் கை ஓங்கி இருக்கிறது என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications