
அபார வெற்றி
குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 89 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - ஹர்திக் பாண்ட்யா சீரான வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்திய போதும், கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. ஆனால் முதல் பந்திலேயே ஜடேஜா அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

காப்பாற்றிய ஹர்திக்
புதிதாக களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் சிங்கிள் அடித்து ஸ்ட்ரைக்கை ஹர்திக் பாண்ட்யாவிடம் கொடுத்தார். கடைசி ஓவரின் 3வது பந்தை பாண்ட்யா ஓங்கி அடிக்க, ஃபீல்டர் அதனை தடுத்தார். அப்போது தினேஷ் கார்த்திக் ரன் ஓடலாம் வா எனக்கூறிய போதும், பாண்ட்யா மறுத்துவிட்டார். மேலும் "நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாம நில்லு" எனக் கூறினார். அதற்கேற்றார் போலவே அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனால் தினேஷ் கார்த்திக் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

தினேஷின் செயல்
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக் செய்த விஷயம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்ஸர் அடித்த பிறகு பாண்ட்யா கையை உயர்த்தி பணியை முடித்துவிட்டேன் என காட்டினார். அப்போது அவரின் அருகில் சென்ற தினேஷ் கார்த்திக், உனது ஆட்டத்திற்கு தலை வணங்குகிறேன் என குனிந்து மரியாதை கொடுத்தார். மேலும் பேட்டை தட்டி பாராட்டினார்.

நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
தற்போதுள்ள இந்திய அணியில் முக்கியமான சீனியர் வீரராக உள்ளவர் தினேஷ் கார்த்திக். பல்வேறு இக்கட்டான சூழலில் நிதானமாக நின்று விளையாடிய அவர், இளம் வீரர் ஹர்திக்கின் நிதானத்தை பார்த்து பொதுவெளியில் தலைவணங்கியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களும், 33 ரன்களும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications