
இலங்கையின் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற அனைவரும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்நிலையில் 2 தருணங்களை பாகிஸ்தான் அணி சரியாக பயன்படுத்தியிருந்தால் கோப்பையை வென்றிருக்கலாம்.

ராஜபக்சவின் அதிரடி
இலங்கை அணியின் ஆபத்தான வீரர்கள் என கருதப்பட்ட அனைவரையும் மளமளவென சரித்தது பாகிஸ்தான். டாப் ஆர்டர் மொத்தமும் சொதப்பியதால் அந்த அணி 58 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. எனினும் அணியை காப்பாற்றி கொண்டு சென்றது பனுக்கா ராஜபக்ச தான். 45 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹசரங்கா 21 பந்துகளில் 36 ரன்களை குவித்தார். இதனால் ஸ்கோர் 170க்கு சென்றது.

அட்டகாச வாய்ப்பு
ராஜபக்சவை முன்கூட்டியே அவுட்டாக்கியிருக்கலாம். 17.4 ஓவரின் போது ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தை ராஜபக்ச தூக்கி அடிக்க முயன்றார். லாங் ஆன் திசையில் இருந்த சதாப் கானிடம் அழகாக சென்றது. ஆனால் கைக்கு வந்த கேட்ச்-ஐ தவறவிட்டார். அப்போது ராஜபக்சவின் ஸ்கோர் 46 ரன்கள் தான். இதுதான் போய்விட்டது என்று பார்த்தால் மற்றொரு வாய்ப்பும் கைநழுவியது.

மிகவும் மோசம்
அடுத்த ஓவரிலேயே முகமது ஹாஸ்னைன் வீசிய பந்தை தூக்கி அடிக்க, அது நேராக ஆசிஃப் அலியிடம் சென்றது. அவரும் பிடிக்க தயாராகி, நெருங்கிவிட்டார். ஆனால் திடீரென சதாப் கான் குறுக்கே பிடிப்பதற்காக வந்து, இருவரும் மோதி கீழே விழுந்தனர். இதனால் பந்து கையில் பட்டு சிக்ஸருக்கு சென்றது.

பாபர் வேதனை
ஒருவேளை இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை பிடித்திருந்தால் 30 ரன்கள் வரை இலங்கைக்கு குறைந்திருக்கும், பாகிஸ்தானும் வென்றிருக்கலாம். இதனை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமே ஒப்புக்கொண்டார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், 20 -30 ரன்கள் வரை அதிகமாக சென்றது தான் தோல்விக்கு காரணம், இனி அதனை சரிசெய்வோம் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications