அந்த வீடியோக்களின் உதவி.. ஆசிய கோப்பையில் எப்படி கம்பேக் ஆனீர்கள்??.. விராட் கோலி வெளிப்படை பேச்சு!
துபாய்: நீண்ட நாட்களுக்கு பிறகு சதமடிக்க முடிந்தது எப்படி என இந்திய வீரர் விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆஃப்கானுடனான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 212/2 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 111/8 ரன்களை மட்டுமே சேர்த்தது.

விராட் கோலி சதம்
இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிய போதும், விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை விளாசினார். 1020 நாட்களுக்கு பிறகு கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இந்நிலையில் இந்த சதம் எப்படி சாத்தியமானது என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

எப்படி சாத்தியம்
அதில், என் மனைவி அனுஷ்கா சர்மா தான் என்னை சரியான பாதையில் வழிநடத்தினார். இன்றைய சதத்திற்கான ஒரு முன்னோட்டங்கள் தான் கடந்த போட்டிகளில் வந்த அரைசதங்கள். 60 ரன்களுக்கு மேல் அடித்த பிறகு சில முறை விக்கெட்டாகாமல் நான் தப்பித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதற்கெல்லாம் கடவுளின் ஆசீர்வாதமே காரணம் என நான் நம்புகிறேன். கடவுளின் ஆசியால் தான் தப்பித்தேன் என்பதை கூற எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. ஏனென்றால் அவரால் தான் நான் இங்கு நிற்கிறேன்.

வீடியோக்களால் உதவி
நான் மீண்டும் எனது தொடக்க காலத்தில் இருந்ததை போன்றே நினைத்துக்கொண்டு புத்துணர்ச்சியாக களமிறங்கினேன். நான் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து, ஆரம்ப கட்டங்களில் எப்படி பந்தை அனுகினேன் என்பதை உற்று கவனித்தேன். அவை அனைத்தையும் மீண்டும் எனக்குள் கொண்டு வந்துள்ளேன். இதுதான் எனது மாற்றத்திற்கான காரணம்.

பெரிய ஆசீர்வாதம்
எனக்கு வெளியில் இருந்து நிறைய அறிவுரைகளும், ஐடியாக்களும் வந்தன. ஆனால் அணியில் யாருமே என்னை எதுவும் கூறவில்லை. உற்சாகமாக சென்று பேட்டிங் செய்யுங்கள் என்று மட்டுமே கூறினர். இன்றைய தினம் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக நான் நினைக்கிறேன் என்று விராட் கோலி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications