விராட் கோலி சதம்.. இந்திய அணி அசுரத்தனமான பேட்டிங்.. ஆஃப்கானுக்கு இமாலய இலக்கு!
துபாய்: ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
Recommended Video
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங்கில் அதிரடி காட்டியது.
ரோகித் சர்மா இல்லாததால் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்களாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 119 ரன்களை விளாசி நல்ல அடிதளத்தை அமைத்துக்கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதன் பின்னர் விராட் கோலி தனது பழைய ஃபார்மை காட்டினார்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் விளாசி தள்ளிய விராட் கோலி 53 பந்துகளில் தனது 71வது சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி இன்று அந்த காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆனால் சதமடித்த பிறகும் அவரின் ருத்ர தாண்டவம் அடங்கவில்லை.
ஒருபுறம் விராட் கோலி அதிரடி காட்ட, மறுபுறம் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ரன்களை குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளும் அடங்கும்.


Click it and Unblock the Notifications