ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடரில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் தான் பெரும்பாலும் உலகக் கோப்பை தொடருக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கீழ் வரிசையில் பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளில் எல்லாம் பிளேயிங் லெவனில் உள்ள ஒன்பது வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய தெரியும்.ஆனால் இந்தியாவுக்கு ஜடேஜாவை தாண்டினாலே பந்துவீச்சாளர்கள் தான் அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் பிசிசிஐ இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது.
அதன்படி சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ யோசித்து வருகிறது.தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யக்கூடிய சுழற் பந்துவீச்சாளர் ஆவார். ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் களமிறங்கியுள்ளார்.
இந்த தொடரில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து நாளை அறிவிக்கப்படும் அணியில் வாஷிங்டன் சுந்தர் பெயர் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதை போன்று தமிழக வீரர் அஸ்வின் ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பலாம் என தெரிகிறது. அஸ்வின் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தற்போது அதிரடியாக விளையாடுகிறார்.
இதனால் அஸ்வினின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஸ்வினின் பெயரும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் 20 வயது நிரம்பிய திலக் வர்மாவுக்கும் ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.