Asia cup 2023- பட்டையை கிளப்பிய பாபர் அசாம்.. 150 ரன்கள் விளாசி அசத்தல்.. நேபாளத்துக்கு இமாலய இலக்கு
முல்தான் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது.
முதலில் மைதானம் காற்று வாங்கினாலும், பாபர் அசாம், தன்னுடைய ஸ்பெஷ் இன்னிங்சில் ரசிகர்களை மைதானத்துக்கு இழுத்தார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. சிமெண்ட் தரை போல் இருந்த மைதானத்தில், ஆமை வேகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினார்கள்.

தொடக்க வீரர் ஃபக்கர் சமான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் இணைந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ரிஸ்வான் தன்னுடைய கவன குறைவால் 44 ரன்களில் ரன் அவுட்டாக, சல்மான் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் மீண்டும் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் சரிந்தது. இதனையடுத்து, இஃப்திகார் அகமது உடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம், அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நேபாளம் வீரர்கள் தடுமாறினர். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 214 ரன்கள் அமைத்தது. சிறப்பாக விளையாடிய பாபர் அசாம். தனது 19வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அத்துடன் நிற்காமல் தொடர்ந்து பாபர் அசாம் சிக்சர், பவுண்டரிகளை விரட்டினார். இதன் மூலம் 131 பந்துகளில் பாபர் அசாம் 151 ரன்களை குவித்தார்.இதில் 4 சிக்சர்களும், 14 பவுண்டரிகளில் அடங்கும். இப்திகார் அகமதும் அபாரமாக விளையாடி 71 பந்துகளில் 109 ரன்களை விளாசினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications