கொழும்பு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 50 ரன்கள் சுருட்டி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றிலே குறைந்த ஓவர்களில் ஆட்டம் முடிவடைந்ததில் இந்த போட்டி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 129 பந்துகள் வீசப்பட்ட நிலையில் இந்த ஆட்டத்தை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த பட்டியலில் அமெரிக்காவும் நேபாளும் விளையாடிய ஆட்டம் 104 பந்துகளில் எல்லாம் முடிந்தது அதன் பிறகு 120 பந்துகளில் இலங்கையும் ஜிம்பாபேவும் மோதிய ஆட்டம் முடிந்தது. இதேபோன்று அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் 263 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் இந்தியா தங்களது இலக்கை சேசிங் செய்தது.
இதன் மூலம் 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 பந்துகள் எஞ்சிய நிலையில் ஆஸ்திரேலிய வென்றது சாதனையாக இருந்தது. அதனை 20 ஆண்டுகள் கழித்து இந்தியா உடைத்திருக்கிறது. இதேபோன்று அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா வெற்றி பெற்றதும் இது முதல் முறையாகும்.
இதற்கு முன்பாக கென்யாவை 231 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி 2001 ஆம் ஆண்டு வீழ்த்தியதே சாதனையாக கருதப்பட்டது. தற்போது அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஒரு நாள் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதேபோன்று ஆசிய கோப்பையை ஒரு வீரராக ரோகித் சர்மாவும் ஜடேஜாவும் நான்கு முறை வென்றிருக்கிறார்கள். ஒரு கேப்டனாக அதிக முறை ஆசிய கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்திருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிவேகமாக ரன்களை சேசிங் செய்ததும் இதுவே முதல் முறையாகும்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கேப்டன் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். ரோகித் தலைமையில் இந்த சாதனையை இந்தியா மூன்று முறை எட்டி இருக்கிறது. முகமது சிராஜ் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்காவது சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக இது அமைந்துள்ளது.