பெங்களூர்: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
குறிப்பாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால் விராட் கோலி நடுவரிசையில் களமிறங்குவதற்கு ஏதுவாக அவரை நான்காவது இடத்தில் களம் இறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள்.

இதே கருத்தை டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களும் கூறினர். இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இப்படித்தான் இருக்கும் என்பதை ராகுல் டிராவிட் சொல்லாமல் சொல்லிவிட்டார்.
அதன்படி ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக பேட்டிங் ஆர்டர் படி தான் பயிற்சி முகாமில் வீரர்கள் விளையாட வருவார்கள்.
ஒரு பேட்ஸ்மேன் பயிற்சி செய்யும்போது அவருக்கு அடுத்தது போட்டியில் களம் இறங்கும் வீரர் அந்த பயிற்சியை பார்க்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் அந்த வீரர் எப்படி விளையாடுகிறார். அதற்கு ஏற்றார் போல் நமது ஆட்டத்தை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது ரன் ஓட வேண்டும் என்பதெல்லாம் தெரிய வரும்.
இதனால் இந்த யுக்தி காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற பேட்டிங் பயிற்சி முகாமில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் பேட்டிங் செய்து வந்தனர். அவர்களுக்குப் பிறகு மூன்றாவது வீரராக விராட் கோலி களத்திற்கு வந்து பேட்டிங் பயிற்சி செய்தார்.
இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது வீரராகவும், கே எல் ராகுல் ஐந்தாவது வீரராகவும் களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார்கள்.மேலும் ஆறாவது வீரராக சூரியகுமார் யாதவும் ஏழாவது வீரராக ஹர்திக் பாண்டியாவும், எட்டாவது வீரராக ஜடேஜாவும் பேட்டிங் பயிற்சி செய்தார்கள். இதன் மூலம் விராட் கோலி மூன்றாவது வீரராக தான் களமிறங்க உள்ளார் என்பது தெளிவாகிவிட்டது.