இது அவரோட கோட்டை.. அடுத்த செஞ்சுரி இங்கதான்.. கோலிக்கு செம்மையா பில்டப் கொடுக்கும் ரசிகர்கள்!
கொழும்பு : இந்திய அணி அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டியில் மோத உள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி நிச்சயம் சதம் அடிப்பார் என அவரது ரசிகர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
76 சதங்கள் : சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலிதான். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 29, ஒருநாள் போட்டிகளில் 46, டி20 போட்டிகளில் ஒரு சதம் என மொத்தம் 76 சர்வேதச போட்டி சதங்களை அடித்து இருக்கிறார். இது இல்லாமல் ஐபிஎல் தொடரில் 7 சதங்கள் அடித்து இருக்கிறார். அது தனி சாதனை.

ராசியான மைதானம் : இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதேசா மைதானம் விராட் கோலியின் ராசியான மைதானம் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அங்கு இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் 519 ரன்கள் குவித்து இருக்கிறார். அதே இடத்தில் 6 டி20 போட்டிகளில் 267 ரன்கள் குவித்துள்ளார்.
மூன்று சதங்கள் : இதில் கடைசியாக இந்த மைதானத்தில் ஆடிய மூன்று ஒருநாள் போட்டிகளில் கோலி தொடர்ந்து சதம் (128*, 131, 110*) அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி இருக்கிறார். மேலும், கடைசியாக இந்த மைதானத்தில் ஆடிய டி20 போட்டியிலும் கூட அவர் 54 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இருக்கிறார்.
கண்டிப்பாக அடிப்பார் : இதை மனதில் வைத்து தான் விராட் கோலி ரசிகர்கள் அவர் நிச்சயம் இந்த முறையும் சதம் அடிப்பார் என கூறி வருகின்றனர். கோலி சதம் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசைதான். ஆனால் போட்டி நடந்தால் தானே அது நடக்கும்?
போட்டி நடக்குமா? : ஆம், கொழும்பில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு கூறுகிறது. அப்படியே போட்டி நடந்தாலும் முழுமையாக 100 ஓவர்கள் வீச வாய்ப்பே இல்லை என்பதே தற்போதைய நிலை. அதை மீறி கோலி சதம் அடிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications