கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த முறை டி20 தொடராக ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை மோதின. லீக் சுற்றில் இந்திய அணியும், சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான அணியும் வெற்றி பெற்றது.

எனினும் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் வெளியேறிய நிலையில், பாகிஸ்தான அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 50 ஓவர் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை மோதி இருக்கிறார்கள். அது யார் அதிக போட்டிகளில் வென்று இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
இதுவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 13 முறை நடைபெற்றிருக்கிறது. அதில் இந்தியா 1986 ஆம் ஆண்டு தவிர்த்து 12 தொடர்களில் பங்கேற்று இருக்கிறது. இதில் இந்திய அணி 7 முறையும், இலங்கை 6 முறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்று இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 49 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது.
இதில் 31 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் இடத்தில் இலங்கை அணி 34 வெற்றிகளுடன் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் 45 போட்டிகளில் விளையாடி 26 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் இதுவரை 13 முறை ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகளில் மோதி இருக்கிறார்கள். இதில் இந்திய அணி ஏழு முறையும் பாகிஸ்தான அணி ஐந்து முறையும் வென்று இருக்கிறது.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா இரண்டு முறை பாகிஸ்தானை எதிர்கொண்டு, இரண்டிலுமே வென்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா நான்கில் வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆசிய கோப்பையில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானிடம் இந்தியா 50 ஓவர் போட்டிகளில் வீழ்ந்தது இல்லை. இதனால் இந்த ரெக்கார்ட் இம்முறையும் தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் சுற்றில் செப்டம்பர் இரண்டாம் தேதி மோதும் இந்தியா பாகிஸ்தான் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றால் செப்டம்பர் 10ஆம் தேதி பலப்பரிட்சை நடக்கும் என்று குறிப்பிடத்தக்கது.