கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரின் மீதமுள்ள சூப்பர் 4 போட்டிகள் மழையின் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்படி மழையால் போட்டிகள் நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டதால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ஆனால், இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு தேர்வாக முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ் மூலம் இறுதிப் போட்டிக்கு மற்றொரு அணி தேர்வு செய்யப்படும் என்ற தகவலும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சொந்த செலவில்.. : பிசிசிஐ பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் ஆட முடியாது என மறுத்ததால் தான் இலங்கையில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிசிசிஐ-இன் முடிவு தற்போது இந்திய அணிக்கே எதிராக திரும்பி இருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது?
எந்த நாட்டில் ஆசிய கோப்பை? : இந்த முறை ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் நாட்டில் தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ மறுப்பு கூறியதால் குரூப் பி-இல் உள்ள போட்டிகளும், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி இடம் பெற்ற போட்டியும் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறும் எனவும், குரூப் ஏ (இந்தியா இடம் பெற்றது) போட்டிகள் மற்றும் சூப்பர் 4 சுற்றின் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மழை பாதிப்பு : இந்த நிலையில், இலங்கையில் மழையால் குரூப் ஏ பிரிவு போட்டிகள் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து சூப்பர் 4 சுற்றின் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் கொழும்பு மைதானத்திலும் 70 சதவீதம் மழை பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டது.
பாகிஸ்தானில் முதல் போட்டி : இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. அதனால், பாகிஸ்தான் தற்போது சூப்பர் 4 புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இடத்தை மாற்றாத கவுன்சில் : அடுத்து நடைபெற உள்ள சூப்பர் 4 போட்டிகள் செப்டம்பர் 9 முதல் துவங்க உள்ளன. ஆனால், கடந்த இரு நாட்களாக கொழும்பில் மழை பெய்து வருகிறது. போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாலை நேரங்களில் மழை பெய்ய 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், போட்டி நடக்கும் இடத்தை மாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
ஐந்து போட்டிகளிலும் மழை : சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தலா இரண்டு போட்டிகளில் மோத வேண்டும். இந்தியா, இலங்கை அணிகள் தலா மூன்று போட்டிகளில் ஆட வேண்டும். மொத்தம் இன்னும் ஐந்து போட்டிகள் நடைபெற வேண்டும். அந்தப் போட்டிகள் எதுவுமே நடைபெறாமல் போகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் யார்? : அப்படி நடந்தால் இறுதிப் போட்டிக்கு எந்த அணிகள் முன்னேறும்? எப்படி அது சாத்தியம்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் ஒரு வெற்றி பெற்று விட்டதால் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும், அடுத்து ஆட வேண்டிய இரண்டு போட்டிகள் நடைபெறாமல் போனால் அதில் ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என்ற கணக்கில் 2 புள்ளிகள் கிடைக்கும். மொத்தம் 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெறும்.
அதே போல, வங்கதேசம் ஒரு தோல்வி அடைந்ததால் அந்த அணி 2 புள்ளிகள் மட்டுமே பெறும். இலங்கை மற்றும் இந்தியா மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து தலா 3 புள்ளிகள் பெறும். இதன் மூலம், பட்டியலில் முதலில் இருக்கும் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். மூன்று புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா - இலங்கை அணிகளில் ஒரு அணி டாஸ் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
விமர்சனம் : இந்த இக்கட்டான நிலைமையை பிசிசிஐ தானாகவே ஏற்படுத்திக் கொண்டதாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. பாகிஸ்தானில் ஆட விருப்பமில்லை என்றால் வழக்கம் போல ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்தி இருக்கலாம். ஆனால், மழை பெய்யும் நேரத்தில் இலங்கையில் போட்டிகளை நடத்த வைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. பிசிசிஐ.