முல்தான் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும் நேபாள் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் பெரிய அளவில் எந்த போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக இரண்டு நாடுகளுக்கு மேல் பங்கேற்கும் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

மேலும் நேபால் அணியும் முதல் முறையாக ஆசிய கோப்பை தொடரில் தகுதி பெற்று இருக்கிறது. தற்போது அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தான் உடன் மோத இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்றும் பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதற்காகவே இது போன்ற ஆடுகளம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமீர் சோஹேல் தெரிவித்துள்ளார்.
மேலும் மாலை நேரத்தில் மின்விளக்குகளுக்கு கீழ் விளையாடும் போது பந்து லேசாக ஸ்விங் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்திருந்தார். அவருடைய கணிப்பிற்கு ஏற்ற வகையில் டாஸ் வென்ற பாபர் அசாம், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
நாங்கள் இந்த தொடரில் நம்பிக்கையுடன் இருப்பதால் பிளேயிங் லெவனை நேற்று மாலை அறிவித்து விட்டோம் என்று அவர் கூறினார். உலகின் நம்பர் ஒன் அணி என்பதால் எந்த கூடுதல் அழுத்தமும் இல்லை என்று குறிப்பிட்ட பாபர் அசாம், எங்களுடைய கிரிக்கெட்டை நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி எதிர்கொள்வோம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய நேபாள அணியின் கேப்டன் ரோஹித் பவுடேல், இது எங்களுடைய முதல் ஆசிய கோப்பை என்பதால் வீரர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று கூறினார். ஆசிய மைதானங்களில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு இருப்பதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று அவர் கூறினார்.