மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் டாப் 3 வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் வினோத ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான அணி அபார வெற்றி பெறும் நிலையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் பலப் பரிட்சை நடத்துகிறது.
இது குறித்து பேட்டி அளித்துள்ள சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணி வீரர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

இந்த பேட்டியில், அதிர்ஷ்டவசமாக இந்தியாவின் நம்பர் ஒன், நம்பர் 2, நம்பர் 3 ஆகிய இடத்திற்கு வீரர்கள் சரியாக அமைந்து விட்டார்கள். இது 50 ஓவர் கிரிக்கெட் போட்டியாக இருக்கலாம். ஆனால் டி20 கிரிக்கெட் போல் ஒரு நாள் தொடரில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் எப்படி விளையாடுவீர்களோ, அதே போன்று ஒரு ஆட்டத்தை ஆசிய கோப்பையிலும் வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் கடைசியாக நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்து இருந்தார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அவர் முதல் 10 ஓவரில் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
இது போன்ற ஒரு யுத்தியை தான் கில், ரோகித் சர்மா ,விராட் கோலி ஆகியோர் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்த வேண்டும். இந்த மூன்று வீரர்களுமே தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும் நிச்சயமாக இந்திய அணி வெற்றி பெறும்.
ஆட்டத்தின் முதல் பகுதியில் நீங்கள் விக்கெட்டை கொடுக்காமல் ரண்களை சேருங்கள்.
இப்படி விளையாடினால் பிற்பகுதியில் விளையாடும் வீரர்கள் அதிரடியாக ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு பெரிய இலக்கை சேர்ப்பார்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் கேல் ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் இஷான் கிஷன் நடு வரிசையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.