கொழும்பு : ஒரு கிரிக்கெட் அணி பணக்கார அணியாக இருக்கலாம். இரண்டு அணிகள் மோதும் போட்டி சுமார் 150 கோடி மக்களால் பார்க்கப்படும் போட்டியாக இருக்கலாம்.
ஆனால், ஒரு தொடரில் நான்கு அணிகள் இருக்கிறது என்றால் அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும். பணக்கார அணிக்கு ஒரு விதியும், மற்ற அணிகளுக்கு வேறு மாதிரியான விதியும் ஏற்படுத்தி ஒரு தொடரை நடத்துவதற்கு பதிலாக அதை கைவிட்டுவிடலாம்.

இந்தியா - பாகிஸ்தான் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இப்படி ஒரு அநியாயம் நடந்து இருக்கிறது. வளர்ந்து வரும் வங்கதேச அணியை கண்டு கொள்ளாமல், சொந்த மண்ணில் ஆடும் இலங்கை அணியை கூட மதிக்காமல் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் சிறப்பு விதிகளை அறிமுகம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
என்ன நடந்தது? : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மிக மோசமான ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடராகவே இதுவரை நடந்து வருகிறது. பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய தொடரை இலங்கைக்கு மழை பெய்யும் காலத்தில் நடத்த முடிவு செய்தது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் அணி இலங்கையிலும், இலங்கை அணி பாகிஸ்தானிலும் தங்கள் குரூப் சுற்றுப் போட்டிகளை ஆடினர் .
கூடுதல் இருப்பு நாள் : இந்த நிலையில் அடுத்த சுற்றான சூப்பர் 4 நடைபெறும் நாட்களில் எல்லாம் மழை கொட்டும் என வானிலை நிலவரம் தெரிவிப்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டது. செப்டம்பர் 10 அன்று நடைபெற வேண்டிய இந்தப் போட்டிக்கு திடீரென கூடுதல் இருப்பு நாளை (Reserve day) அறிவித்து இருக்கிறது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
என்ன விதி? : அதாவது போட்டி நடைபெற வேண்டிய அன்று மழை பெய்தால் அதற்கு அடுத்த நாள் முழு போட்டியோ அல்லது மழையால் போட்டி எங்கு நின்றதோ அங்கிருந்து போட்டி தொடர்ந்து நடைபெறும். ஆனால், இந்த சிறப்பு விதி இலங்கை - வங்கதேச அணிகளுக்கு கிடையாது என்பது தான் இதில் குமுறலை கிளப்பி இருக்கிறது.

ஏன் இந்த கட்டாயம்? : சரி, மற்ற அணிகளுக்கு கூடுதல் இருப்பு நாள் இல்லை. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ஏன்? அதிக மக்கள் காணும் போட்டி என்பதால் மட்டுமல்ல. ஏற்கனவே, பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய தொடரை அவர்கள் விருப்பமின்றி பெரும் பகுதியை இலங்கைக்கு மாற்றியது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். அதனால், வெறுப்பில் இருந்த பாகிஸ்தான், மழையால் டிக்கெட் வருவாயும் குறைந்ததால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறது. அதை சரி செய்யத் தான் அடுத்து நடக்க இருக்கும் முக்கியமான போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இந்த சிறப்பு விதிகளை அமல்படுத்தி டிக்கெட் வருவாய் குறையாமல் இருக்க வழிவகை செய்துள்ளது.
மற்ற அணிகளுக்கு? : ஒருவேளை கூடுதல் இருப்பு நாள் வசதியை சூப்பர் 4 சுற்றில் அமல்படுத்துவதாக இருந்தால் இதே சுற்றில் இடம் பெற்று இருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கும் பொதுவாக அதை செய்ய வேண்டும். அப்படி செய்ய போதுமான இடைவெளி இந்த தொடரில் இல்லை. தொடர்ந்து போட்டிகள் நடத்தினால் மட்டுமே தொடரை திட்டமிட்டபடி முடிக்க முடியும். அப்படி பொதுவாக அமல்படுத்த முடியாது என்றால் இந்த விதிகளை அமல்படுத்தாமல் இருப்பதே நியாயமாக இருக்கும்.
சொந்த மண்ணில் அவமானம் : ஆனால், பிசிசிஐ போன்ற பணக்கார அமைப்பை எதிர்த்து பேச முடியாத சூழலில் மற்ற கிரிக்கெட் அமைப்புகள் அமைதியாக உள்ளன. இதில் கொடுமை என்னவென்றால் சொந்த மண்ணில் இலங்கை அணிக்கும் இதே கதிதான். கிரிக்கெட் அமைப்பு அமைதியாக இருந்தாலும் இலங்கை வீரர்கள் கூடாரத்தில் இந்த விஷயம் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு புள்ளியும், இரண்டு புள்ளிகளும் ஒன்றா? : தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்துள்ள வங்கதேச அணி, ஒருவேளை மழையால் போட்டி கைவிடப்பட்டால் ஒரு புள்ளி மட்டுமே பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும். ஆனால், இந்தியாவோ, பாகிஸ்தானோ மழையால் போட்டி நின்றாலும் மறுநாள் ஆடி அதில் வென்றால் இரண்டு புள்ளிகளை பெறலாம். இது எப்படி நியாயமாக இருக்கும்?

கொதிக்கும் வங்கதேசம் : வங்கதேச அணி வீரர்கள் எப்போதும் ஆக்ரோஷமான குணம் கொண்டவர்கள். அவர்கள் போட்டியில் ஒரு தவறான முடிவை அம்பயர் அளித்தால் கூட பொங்கி விடுவார்கள். அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமல்ல, அந்த நாட்டின் ஊடகத்தினரும் இப்படி ஒரு நியாயமற்ற செயலை கண்டு கொதித்து போய் இருக்கிறார்கள்.
தவறுக்கு மேல் தவறு : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மழையை காரணம் காட்டி போட்டி நடக்கும் மைதானத்தை மாற்றினால் அதை யாரும் குறை கூறப் போவதில்லை. ஆனால், போட்டியை இடம் மாற்றாமல் தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது என்பதே மற்ற நாடுகளின் குமுறலாக இருக்கிறது.