Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: "சிராஜ், பிரசித்தை விட இவர் பெரிய பவுலரா?”.. ஹர்ஷித் ராணாவை விளாசிய முன்னாள் வீரர்

மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களின் நீக்கம் ஒருபுறம் விவாதமாக மாறியிருக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் தேர்வு, இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

"சாதாரணமான செயல்பாட்டை கொண்ட ஒருவருக்கு ஆசிய கோப்பை அணியில் இடமா?" என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவை கடுமையாகச் சாடியுள்ளார்.

Asia Cup 2025 Aakash Chopra Slams Harshit Rana s Selection Calls it Unfair to Mohammed Siraj and Prasidh Krishna

சாதாரணமான ஆட்டம்.. தகுதியே இல்லை!

2025 ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணாவின் செயல்பாடு அவ்வளவு சிறந்ததாக இல்லை. அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், ஓவருக்கு 10.18 ரன்கள் என்ற விகிதத்தில் வாரி வழங்கியிருந்தார். சர்வதேச டி20 போட்டிகளிலும் அவருக்குப் பெரிதாக அனுபவம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு வீரரை, அனுபவ வீரரான முகமது சிராஜ் மற்றும் 2025 ஐபிஎல் தொடரின் பர்பிள் கேப் வென்ற பிரசித் கிருஷ்ணா ஆகியோரைப் புறக்கணித்துவிட்டு அணியில் சேர்த்தது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "ஹர்ஷித் ராணாவின் தேர்வு மிகவும் சுவாரஸ்யமானது. இது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர் ஒருமுறை சிவம் துபேவுக்கு மாற்றாக களமிறங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றது அபாரமானது. ஆனால் அதற்கு முன்னும் பின்னும் அவருடைய ஆட்டம் எப்படி இருந்தது?" என்று கேள்வியுடன் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் சாதாரணமாக இருந்தது. புள்ளிவிவரங்கள் சிறப்பாக இல்லை. இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு அவருடைய புள்ளிவிவரங்கள் வலுவாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பதற்கு அவர் போதுமான பங்களிப்பை அளிக்கவில்லை என்பதைச் சொல்ல நான் தயங்க மாட்டேன்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்கு அநீதி?

ஹர்ஷித் ராணாவின் தேர்வை விமர்சித்ததோடு நில்லாமல், வாய்ப்பு மறுக்கப்பட்ட வீரர்கள் குறித்தும் ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "சமீபத்திய செயல்பாடுகளைப் பார்த்தால், பிரசித் கிருஷ்ணாவுக்கு 15 வீரர்கள் கொண்ட பிரதான அணியில் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவரை ரிசர்வ் வீரராக மட்டுமே வைத்துள்ளார்கள். அதேபோல, இங்கிலாந்தில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது சிராஜ்க்கு பரிசு அளிக்கும் விதமாக அணியில் சேர்த்திருக்கலாம். ஆனால், தேர்வுக் குழு மீண்டும் ஹர்ஷித் ராணாவை நோக்கியே சென்றுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆடும் 11இல் வாய்ப்பு கிடைக்குமா?

மேலும், ஹர்ஷித் ராணாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதே சந்தேகம் என்றும் சோப்ரா கூறியுள்ளார். "உண்மையில், அவருக்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காது. ஒருவேளை, பலவீனமான அணிக்கு எதிராக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டால் மட்டுமே அவருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். விளையாடவே வாய்ப்பு இல்லாத ஒரு வீரரைத் தேர்வு செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.

மொத்தத்தில், அனுபவமும், சிறப்பான செயல்பாடுகளும் கொண்ட வீரர்களைப் புறக்கணித்துவிட்டு, சுமாரான செயல்பாட்டைக் கொண்ட ஹர்ஷித் ராணாவைத் தேர்வு செய்திருப்பது, ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, August 21, 2025, 10:04 [IST]
Other articles published on Aug 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+