துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா வலைப் பயிற்சியின்போது சிக்ஸர் மழை பொழிந்து, எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் நடைபெற்ற விருப்பப் பயிற்சி முகாமில், சுமார் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா, 25 முதல் 30 ராட்சத சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இந்திய அணி விளையாடுவதற்கு இந்த விருப்பப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்ட போதிலும், அனைவரின் பார்வையையும் ஈர்த்தவர் அபிஷேக் சர்மா தான். தனது ஒரு மணி நேர பயிற்சியை ஒரு "ரேஞ்ச்-ஹிட்டிங்" கண்காட்சியாக மாற்றிய அவர், பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.

தனது அற்புதமான கண்-கை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்த்தியான டைமிங் மூலம் பந்துகளை எளிதாக எல்லைக்கோட்டிற்கு வெளியே அனுப்பினார் அபிஷேக் சர்மா. அவர் அடித்த பல சிக்ஸர்கள், வலைப் பயிற்சி நடக்கும் இடத்தையும் தாண்டி வெளியே சென்று விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வலைப்பயிற்சியின் மூலம், 2025 ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட மந்தமான ஆடுகளங்களில் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடப் போவதை உறுதி செய்து இருக்கிறார். இது எதிரணிகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அமைந்துள்ளது.
இந்த பயிற்சி முகாமில், மூத்த வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் ஓய்வெடுத்துக் கொண்டனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், பந்துவீசாமல் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்தினார். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, பயிற்சியாளர் டி. திலீப் வழிகாட்டுதலின் கீழ், "நோ-லுக்" கேட்சிங் பயிற்சிகளில் ஈடுபட்டு தனது திறமைகளை மெருகேற்றினார்.