அபுதாபி: 2025 ஆசியக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், 'பி' பிரிவில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்த விறுவிறுப்பான போட்டிக்கான டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
டாஸ் வென்ற பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இது பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளமாகத் தெரிகிறது. ஒரு நல்ல ஸ்கோரை குவிப்பது பந்துவீச்சாளர்களுக்குப் பெரிதும் உதவும். டி20 போட்டிகளில் டாஸ் வெல்வது, தோற்பது பெரிய விஷயமல்ல. ஆனால், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த சிறந்த வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி தோல்வியை நாங்கள் மறந்துவிட்டோம். இன்றைய போட்டியில் வெல்வதில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறோம். இறுதிப் போட்டியில் விளையாடிய அணியில் இருந்து ஒரே ஒரு மாற்றம், தர்விஷ் ரசூலிக்கு பதிலாக குல்பாதின் நைப் அணிக்குத் திரும்பியுள்ளார்" என்றார்.

ஹாங்காங் அணியின் கேப்டன் யாசிம் முர்தாசா பேசுகையில், "நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம். அதனால் டாஸ் இழந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த இடத்திற்கு வர நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடினோம். ஒரு கேப்டனாக, இளம் வீரர் கல்ஹான் சல்லு இந்த பெரிய மேடையில் எப்படிச் செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்" என்று தெரிவித்தார்.
ஆடுகளம் குறித்து வர்ணனையாளர்கள் கூறுகையில், "இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக, தட்டையாகக் காணப்படுகிறது. புற்கள் சீராக இருப்பதால், பந்து நன்றாக பேட்டிற்கு வரும். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது ஒரு நல்ல முடிவாக இருக்கும். கடந்த ஆண்டு அயர்லாந்து அணி இங்கு 199 ரன்களை வெற்றிகரமாக தடுத்து வெற்றி பெற்றுள்ளது. பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே, முதலில் ரன்களைக் குவித்துவிட்டு, பின்னர் டிஃபென்ட் செய்வது சரியான உத்தியாக இருக்கும்," என்று கணித்துள்ளனர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), செடிக்குல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், ஏ.எம். கசன்ஃபர், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
ஜீஷன் அலி(விக்கெட் கீப்பர்), பாபர் ஹயாத், அன்ஷுமன் ராத், கல்ஹான் சல்லு, நிஜாகத் கான், அய்சாஸ் கான், கிஞ்சித் ஷா, யாசிம் முர்தாசா (கேப்டன்), ஆயுஷ் சுக்லா, அதீக் இக்பால், எஹ்சன் கான்