சென்னை: 2025 ஆசிய கோப்பை தொடரின் தரம் குறித்து, இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வங்கதேச அணியை மிக கடுமையாக பேசி உள்ள அஸ்வின், இந்தத் தொடரில் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய அணிகளே இல்லை என்றும் போட்டியை சுவாரஸ்யமாக்க தென்னாப்பிரிக்கா அல்லது இந்தியா 'ஏ' அணியைச் சேர்க்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த எட்டு நாடுகள் பங்கேற்கும் தொடர், போட்டித்தன்மை இல்லாமல் இருப்பதாக அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணி ஆடிய கடைசி 20 போட்டிகளில் 17-ல் வெற்றி பெற்று அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது.

இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், "இந்தத் தொடரை மேலும் போட்டித்தன்மை உள்ளதாக மாற்ற, தென்னாப்பிரிக்காவை சேர்த்து இதனை 'ஆஃப்ரோ-ஆசிய கோப்பை'யாக மாற்றலாம். அல்லது, குறைந்தபட்சம் ஒரு இந்தியா 'ஏ' அணியையாவது சேர்த்தால்தான் போட்டி கடுமையாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், வங்கதேச அணியைப் பற்றி பேசுகையில், "நாம் வங்கதேசம் பற்றி பேசவே இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. இந்த அணிகள் எப்படி இந்தியாவிற்கு எதிராக போட்டியிடப் போகின்றன?" என்று அஸ்வின் வெளிப்படையாக சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஓரளவு சவால் அளிக்கலாம் என்றாலும், அவர்களது பேட்டிங் இந்தியாவிற்கு எதிராக எடுபடாது என்றார். "ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக கருதப்பட்டாலும், இந்தியா முதலில் பேட்டிங் செய்து 170 ரன்களுக்கு மேல் எடுத்தால், அதை அவர்களால் எப்படி சேஸ் செய்ய முடியும்? அது கிட்டத்தட்ட சாத்தியமற்றது" என்றார் அவர்.
"இந்தியாவை வீழ்த்துவதற்கான ஒரே வழி, ஒரு நல்ல நாளில் அவர்களை 155 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, பின்னர் அந்த இலக்கை வெற்றிகரமாகத் துரத்துவது மட்டுமே. பொதுவாக டி20 போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆசிய கோப்பையில் அதையும் இந்திய அணி ஒருதலைப்பட்சமாக மாற்றிவிடும்" என்று அஸ்வின் கூறினார்.
இந்தத் தொடர், 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு ஒரு முன்னோட்டம் அல்ல, அது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும் அஸ்வின் விமர்சித்துள்ளார்.
அஸ்வினின் இந்த தைரியமான கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோர், இந்தியாவை அசைக்க முடியாத அணி என்று முத்திரை குத்த மறுத்துவிட்டனர்.
இந்தியா ஆதிக்கம் செலுத்தும் அணியாகப் பார்க்கப்படுவது குறித்து கேட்டபோது, சூர்யகுமார் யாதவ், "நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு அணியும் இங்கு போட்டியிடவே வந்துள்ளது" என்றார்.
சல்மான் அலி ஆகாவும் இதே போன்ற கருத்தையே எதிரொலித்தார். "இங்கு யாரும் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. டி20 கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் போட்டியில் வென்றுவிட முடியும்" என்றார். கேப்டன்கள் இப்படி கூறி இருக்கும் நிலையில், அஸ்வின் இந்திய அணியை வீழ்த்த எந்த ஆசிய அணியாலும் முடியாது என கூறி இருப்பது சரியா?