Asia Cup: டக் அவுட் ஆவதில் ரோஹித் சர்மாவை முந்திய தசுன் ஷனகா.. டி20 கிரிக்கெட்டில் சோக வரலாறு
அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா, டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக ஹீரோவாக ஜொலித்த அவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 'டக் அவுட்' ஆகி, இந்த விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சோகமான சாதனையை ஷனகா படைத்துள்ளார். இது அவரது 14வது டக் அவுட் ஆகும். இதன் மூலம், தலா 13 டக் அவுட்களுடன் இருந்த வங்கதேசத்தின் சௌமியா சர்க்கார் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 12 டக் அவுட்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்:
- தசுன் ஷனகா (இலங்கை): 14 டக் அவுட்கள்
- சௌமியா சர்க்கார் (வங்கதேசம்): 13 டக் அவுட்கள்
- பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து): 13 டக் அவுட்கள்
- கெவின் ஓ'பிரைன் (அயர்லாந்து): 12 டக் அவுட்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா): 12 டக் அவுட்கள்
ஹீரோ டூ ஜீரோ:
ஷனகா இந்த மோசமான சாதனையை படைத்திருந்தாலும், அவர் இலங்கை அணியின் சிறந்த டி20 வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை 1601 ரன்களும், 38 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். கடந்த வாரம் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த சூப்பர் 4 போட்டியில் ஷனகா37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் விளாசியதோடு, பந்துவீச்சிலும் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ஷனகாவிற்கு, பந்துவீசவும் வாய்ப்பு அளிக்கப்படாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 133 ரன்கள் என்ற குறைவான இலக்கை பாகிஸ்தான் துரத்தியபோது, இலங்கை பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.
பாகிஸ்தான் அணியின் ஹுசைன் தலாத் மற்றும் முகமது நவாஸ் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டிருந்த முக்கியமான நேரத்தில் கூட, கேப்டன் சரித் அசலங்கா, தனது அனுபவமிக்க ஆல்-ரவுண்டரான ஷனகாவிற்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது விமர்சனத்துக்குள்ளானது. ஒரே வாரத்தில் ஹீரோவாகவும், ஜீரோவாகவும் மாறி இருக்கிறார் தசுன் ஷனகா.


Click it and Unblock the Notifications