Asia cup: அம்பானிக்காக மட்டும் தான் விளையாடுவீங்களா? இதை பாருங்க.. சூர்யகுமாரை வெளுக்கும் ரசிகர்கள்
துபாய்: இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் சிறப்பாக களத்தில் செயல்பட்டு வரும் நிலையில், ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து தடுமாறி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவை சுற்றி தான் பல்வேறு சர்ச்சை சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆனால் பேட்டிங்கில் கொஞ்சம் கூட அவர் ரன்கள் சேர்க்கவில்லை. கடைசியாக விளையாடிய 18 இன்னிங்ஸில் இந்திய அணிக்காக வெறும் இரண்டே இரண்டு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். மேலும் 10 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் சூரியகுமார் யாதவ் நடப்பாண்டில் மொத்தமாக இந்திய அணிக்காக ஒன்பது இன்னிங்ஸ்களில் விளையாடி 87 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 12 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 112 என்ற அளவில் மோசமாக உள்ளது.
நடப்பாண்டில் சூரிய குமார் யாதவ் ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை. ஆனால் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பட்டையை கிளப்பினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சூரியகுமார் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
16 இன்னிங்ஸ் விளையாடிய அவர் மொத்தமாக 717 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 65 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 167 என்ற அளவில் இருந்தது. அதில் ஐந்து அரை சதம் அடங்கும். இதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், இந்திய அணிக்கு தடுமாறுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
சூரியகுமார் மற்ற விஷயங்களில் எல்லாம் கவனத்தை செலுத்துவதை விட பேட்டிங்கில் கவனத்தை செலுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கிரிகெட் களத்தில் கிரிக்கெட் மட்டும் விளையாட வேண்டும் தவிர மற்ற அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் கிரிக்கெட் பற்றியே சூரியகுமார் யாதவ் யோசிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கேப்டனாக இருப்பதால் சூரியகுமார் யாதவ் தப்பித்து வருவதாகவும் இல்லை என்றால் அணியில் எப்போதும் நீக்கப்பட்டிருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications