துபாய்: ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதற்கு, பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் திட்டம் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. சிவம் துபே இடத்தில் அர்ஷ்தீப் சிங்கை கொண்டு வர வேண்டும் என்று பலரும் பேசிய நிலையில், ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். ஆனால் காயம் அடைந்த ஹர்திக் இடத்தில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கை கம்பீர் கொண்டு வந்தார்.
ஆசியக் கோப்பை தொடரை 9வது முறையாக இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தாலும், இந்திய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனிடையே ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த வெற்றிக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டால், சிவம் துபேவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை சேர்க்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர்.
அதாவது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிதாக உள்ளதால், வலுவாக இருப்பதால் ஒரு ஆல்ரவுண்டரை நீக்கிவிட்டு பவுலரை சேர்க்க வேண்டும் என்று பலரும் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் எதிர்பாராத வகையில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். இதனால் கூடுதலாக ஒரு பவுலர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கை கம்பீர் தேர்வு செய்தார்.
இதனால் பவர் பிளே பவுலிங்கை யார் வீசுவார்கள் என்ற கேள்வி எழுந்த போது, அசால்ட்டாக சிவம் துபே கையில் பந்து கொடுக்கப்பட்டது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட திட்டத்தை சரியாக செயல்படுத்தினார். அதேபோல் ஆசியக் கோப்பையில் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால், மிடில் ஆர்டர் கொஞ்சம் தடுமாறிக் கொண்டே இருந்தது.
இதனால் இறுதிப் போட்டியில் தொடக்க வீரர்கள் சொதப்பினால், இந்திய அணி தோல்வி உறுதி என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கம்பீர் முன்னெச்சரிக்கையாகவே ரிங்கு சிங்குவை கொண்டு வந்துள்ளார். டாஸின் போது இந்திய அணியின் இந்த திட்டத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தன. ஆனால் கூடுதல் பேட்ஸ்மேன் இருந்ததாலேயே, 10வது ஓவருக்கு பின் திலக் வர்மா அதிரடியாக விளையாட முடிந்தது.
சிவம் துபே உள்ளே வரும் போதே அதிரடியாக விளையாட அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஏனென்றால் தனக்கு பின் ஃபினிஷரான ரிங்கு சிங் இருக்கிறார் என்ற நம்பிக்கை தான். இதனால் கம்பீரின் திட்டம் இந்திய அணிக்கு 9வது ஆசியக் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபியை கம்பீர் வென்ற நிலையில், தற்போது ஆசியக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.