துபாய்: இந்தியாவுடனான 'கைகுலுக்கல் சர்ச்சை' பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கே பெரும் தலைவலியாக மாறியுள்ளது. போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்கவில்லை என்றால், ஆசிய கோப்பையிலிருந்து விலகுவோம் என்று பாகிஸ்தான் விடுத்த மிரட்டல், தற்போது அவர்களுக்கே எதிராகத் திரும்பியுள்ளது. ஒருவேளை, பாகிஸ்தான் தனது மிரட்டலை நிறைவேற்றி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான போட்டியைப் புறக்கணித்தால், அவர்கள் தொடரிலிருந்து வெளியேறுவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார். இந்த கைகுலுக்கல் சர்ச்சை, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் தூண்டுதலாலேயே நடந்தது என்று குற்றம் சாட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவரை நீக்கக் கோரி ஐசிசி-யிடம் புகார் அளித்து, தொடரிலிருந்தே விலகுவோம் என்றும் மிரட்டியது. ஆனால், ஐசிசி இந்த மிரட்டலுக்குப் பணியாது என்றே தெரிகிறது.

பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியை விளையாட மறுத்தால், கிரிக்கெட் விதிகளின்படி, ஐக்கிய அரபு அமீரக அணிக்கு 'வாக் ஓவர்' அளிக்கப்பட்டு, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதன் விளைவுகள் பாகிஸ்தானுக்கு மிகவும் பாதகமாக அமையும்.
பாகிஸ்தான் வெளியேறும்: 'வாக் ஓவர்' கொடுத்தால், பாகிஸ்தான் அணி ஓமனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியின் மூலம் கிடைத்த 2 புள்ளிகளுடன் மட்டுமே இருக்கும். இது சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறப் போதுமானதல்ல.
ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெறும்: ஓமனுக்கு எதிரான வெற்றியின் மூலம் ஏற்கனவே 2 புள்ளிகளைப் பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரகம், இந்த 'வாக்கோவர்' வெற்றியின் மூலம் மேலும் 2 புள்ளிகளைப் பெற்று, மொத்தமாக 4 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
இந்தியாவுடன் இணையும் அமீரகம்: இந்திய அணி ஏற்கனவே 4 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் வெளியேறும் பட்சத்தில், இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் 'குரூப் ஏ' பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
தற்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் விடுத்த மிரட்டலால் தங்களுக்குத் தாங்களே ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால்: ஆசிய கோப்பையிலிருந்து வெளியேற வேண்டிய அவமானம் ஏற்படும். அந்தப் போட்டியில் விளையாடினால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டி ஒரு நேரடி 'நாக்-அவுட்' போட்டியாக மாறும். இதில் வெற்றி பெறும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஐசிசி அமைப்பு போட்டி நடுவரை நீக்காத பட்சத்தில், பாகிஸ்தான் அணி தங்கள் மிரட்டலைக் கைவிட்டு போட்டியில் பங்கேற்குமா அல்லது ஈகோவை முன்னிறுத்தி தொடரிலிருந்தே வெளியேறி, தங்களின் சூப்பர் 4 வாய்ப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தாரை வார்ப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.