ஆசியக் கோப்பை IND vs PAK விளம்பர சர்ச்சை.. சேவாக், பிசிசிஐ மீது பாய்ந்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான விளம்பர வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை முன்னிறுத்தி ஒளிபரப்பு நிறுவனமான சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வெளியிட்ட இந்த வீடியோ, ரசிகர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இந்த விளம்பர வீடியோவில் தோன்றியதால், அவருக்கும் பிசிசிஐ-க்கும் எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மேலும், ஆசிய கோப்பை தொடரை புறக்கணிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சர்ச்சைக்குக் காரணம் என்ன?
2025 ஆசியக் கோப்பை தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நோக்கில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி மற்றும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோர் இடம்பெற்ற விளம்பர வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. குறிப்பாக, செப்டம்பர் 14 அன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மையப்படுத்தி இந்த வீடியோ அமைந்து இருந்தது.
இந்த விளம்பர வீடியோ பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23 அன்று ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது.
இந்த கொடூரத் தாக்குதலின் சோகம் மறைவதற்குள், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை கொண்டாட்டமாக முன்னிறுத்துவதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டின் உணர்வுகளை மதிக்காமல், வர்த்தக நோக்கத்திற்காக இந்த போட்டி விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறி, ஆசியக் கோப்பையை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
சேவாக் மீது பாய்ந்த விமர்சனங்கள்:
பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம் பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவு கூடாது என்று ஆக்ரோஷமாக கருத்து தெரிவிப்பவர் வீரேந்திர சேவாக். ஆனால், தற்போது அவரே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர வீடியோவில் தோன்றியது இரட்டை நிலைப்பாடு என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "பணத்திற்காக தேசப்பற்றை மறந்துவிட்டீர்களா?" என்று பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிசிசிஐ-க்கு எதிராக வலுக்கும் கண்டனம்:
ரசிகர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து, இந்தப் போட்டிக்கு அனுமதி அளித்த பிசிசிஐ-யும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. சமூக வலைதளங்களில் #BoycottAsiaCup என்ற ஹேஷ்டேக் பரவலாகி, ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்திய விளையாட்டு அமைச்சகம், பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காது, ஆனால் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் விளையாடும் என்ற கொள்கையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், பகல்காம் தாக்குதலின் காயங்கள் ஆறுவதற்குள், இத்தகைய விளம்பரங்கள் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆசியக் கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications