துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றது.
இந்தப் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் இருந்தனர். ஒருவர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 69 ரன்கள் குவித்த திலக் வர்மா. மற்றொருவர், இந்திய அணி மிகவும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தபோது களமிறங்கி, அதிரடியாக ஆடிய சிவம் துபே. அவர் 22 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து, அணியிலேயே அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் 38 பந்துகளில் 57 ரன்களும், ஃபகார் ஜமான் 35 பந்துகளில் 46 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணி, முதல் 10 ஓவர்கள் வரை தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது இந்திய அணி மூன்று விக்கெட்டை இழந்திருந்தது. அதன் பிறகு 13வது ஓவரில் சஞ்சு சாம்சன் நான்காவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி வெறும் 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஒரு ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது இந்திய அணி.
அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் திலக் வர்மா அபாரமாக ஆடினர். சிவம் துபே இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். அவர் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அவர் அடித்த சிக்ஸர்கள் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை உடைத்தது. அங்கே இருந்து தான் இந்திய அணியின் ஆதிக்கமும் தொடங்கியது.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய திலக் வர்மா, அணியை இறுதிவரை வழிநடத்திச் சென்று 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி கோப்பையை உறுதி செய்தார். திலக் வர்மா அரைசதம் அடித்தாலும், சிவம் துபேவின் அதிரடி ஆட்டம் போட்டியின் போக்கை மாற்றியது. திலக் வர்மா விக்கெட்டை தற்காத்து கடைசி வரை நின்று அசத்தினார்.