For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: பாகிஸ்தான் வீரருக்கு 2 போட்டிகள் தடை.. பும்ரா, சூர்யகுமாருக்கு தண்டனை.. ஐசிசி அதிரடி

துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃபிற்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடையும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்குப் போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் பும்ராவுக்கும் சிறிய அளவில் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.

2025 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின் போது ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து, ஐசிசியின் எலைட் பேனல் போட்டி நடுவர்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவிலேயே இந்தத் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன? அவர்கள் செய்த தவறு என்ன? என விரிவாக பார்க்கலாம்.

Asia Cup 2025 IND vs PAK Suryakumar Yadav Fined Haris Rauf Banned for 2 Matches - ICC Action

ஐசிசியின் தீர்ப்பும், தண்டனை விவரங்களும்:

ஐசிசியின் நன்னடத்தை விதிகளின் கீழ், விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் விவரங்கள்:

ஹரிஸ் ராஃப் (பாகிஸ்தான்): இரண்டு வெவ்வேறு போட்டிகளில் விதிகளை மீறியதற்காக, அவருக்கு இரண்டு முறை தலா 30% போட்டி கட்டண அபராதமும், இரண்டு முறை தலா 2 தகுதி குறைப்புப் புள்ளிகளும் (மொத்தம் 4 புள்ளிகள்) விதிக்கப்பட்டன. நான்கு தகுதி குறைப்புப் புள்ளிகள் என்பது இரண்டு போட்டிகள் தடைக்குச் சமம் என்பதால், அவர் அடுத்த இரண்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் (இந்தியா): விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்குப் போட்டி கட்டணத்தில் 30% அபராதமும், இரண்டு தகுதி குறைப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்): இதே குற்றத்திற்காக இவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஒரு தகுதி குறைப்புப் புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா): தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால், அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையுடன், ஒரு தகுதி குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டது.

அர்ஷ்தீப் சிங் (இந்தியா): இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டு, எந்தத் தண்டனையும் விதிக்கப்படவில்லை.

சர்ச்சைக்குள்ளான சம்பவங்கள் என்ன?

ஹரிஸ் ராஃபின் சைகைகள் ("6-0" மற்றும் விமானம்):

ஆசிய கோப்பைத் தொடரின் போது, இந்திய ரசிகர்கள் "கோலி, கோலி" என்று கோஷமிட்டு அவரைச் சீண்டியபோது, ஹரிஸ் ராஃப் தனது கைகளால் "6-0" என்று சைகை காட்டினார். மேலும், மற்றொரு தருணத்தில், விமானம் தரையிறங்குவது போலச் சைகை செய்து இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சைகைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

சாஹிப்சாதா ஃபர்ஹானின் 'துப்பாக்கி' கொண்டாட்டம்:

பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், அரைசதம் அடித்த பிறகு, தனது மட்டையைத் துப்பாக்கி போல உயர்த்தி, சக வீரர்களின் ஓய்வறையை நோக்கிச் சுடுவது போல பாவனை செய்தார். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் பதற்றமான சூழலில், இது போன்ற கொண்டாட்டம் பொருத்தமற்றது என்று விமர்சனங்கள் எழுந்தன.

கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்:

ஆசிய கோப்பை தொடருக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா என்ற விவாதம் இந்தியாவிற்குள் எழுந்திருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து, போட்டிக்குப் பிந்தைய சம்பிரதாயமான கை குலுக்கலில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சில இந்திய வீரர்கள் பங்கேற்காமல், நேரடியாக ஓய்வறைக்குத் திரும்பினர். அது குறித்து விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ் ஆபரேஷன் சிந்தூர் பற்றியும், இந்திய இராணுவம் குறித்தும் பேசினார். அது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானது என்பதால் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ராவின் பதிலடி:

இறுதிப் போட்டியின்போது, ஹரிஸ் ராஃபை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, ஜஸ்பிரித் பும்ரா, ராஃபின் முந்தைய விமானக் கொண்டாட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, போர் விமானம் போலச் சுருக்கமாகச் சைகை செய்தார். இது களத்தில் நடந்த போட்டி மனப்பான்மையுடன் கூடிய பதிலாகப் பார்க்கப்பட்டது.

அர்ஷ்தீப் சிங்கின் ஆக்ரோஷம்:

சூப்பர் 4 போட்டியின் போது, அர்ஷ்தீப் சிங்கின் ஆக்ரோஷமான எதிர்வினை சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது. அவரது சைகை ஹரிஸ் ராஃபை நோக்கி இருந்ததாகச் சிலர் கருதினர். இருப்பினும், விசாரணையில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.

Story first published: Tuesday, November 4, 2025, 21:05 [IST]
Other articles published on Nov 4, 2025
English summary
Asia Cup 2025 IND vs PAK: Suryakumar Yadav Fined; Haris Rauf Banned for 2 Matches - ICC Action
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+