துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், அதையும் மீறி அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது எந்த அளவுக்கு சென்று இருக்கிறது என்றால் உலகின் மோசமான ஃபீல்டிங் அணி என கூறப்படும் பாகிஸ்தானை விட இந்தியாவே நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மோசமான ஃபீல்டிங் அணியாக, அதிக கேட்ச்களை தவறவிட்ட அணியாக உள்ளது. அது பற்றிய புள்ளி விவரம் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாகிஸ்தான் தான் இந்த ஆசிய கோப்பை தொடரில் கேட்ச் பிடிப்பதில் சிறந்த அணியாக இருக்கிறது.

நேற்று நடந்த போட்டியில் வங்கதேச வீரர் சையிஃப் ஹசனுக்கு மட்டும் இந்திய வீரர்கள் நான்கு முறை கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டு, ஒரு டி20 போட்டியில் ஒரே பேட்ஸ்மேனுக்கு அதிக கேட்ச்களைத் தவறவிட்ட அணி என்ற விரும்பத்தகாத உலக சாதனையை இந்தியா படைத்தது. இத்துடன் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 12 கேட்ச்களை கோட்டை விட்டு இருக்கிறது. ஹாங்காங், ஓமன் போன்ற அணிகளை விட ஃபீல்டிங்கில் மோசமாக செயல்பட்டுள்ளது.
வங்கதேச போட்டியில் மட்டுமல்ல, இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதுமே இந்திய அணியின் ஃபீல்டிங் பெரும் கவலையளிக்கும் விதமாகவே இருந்தது. தொடரில் இதுவரை 12 கேட்ச்களைத் தவறவிட்டு, இந்திய அணி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய வீரர்களின் கேட்ச் பிடிக்கும் திறன் (Catch Efficiency) வெறும் 67.5% ஆக இருக்கிறது.
அதாவது தங்களுக்கு கிடைத்த கேட்ச்வாய்ப்புகளில் 67.5 சதவீத கேட்ச்களை மட்டுமே இந்திய அணி பிடித்துள்ளது. கேட்ச் பிடிக்கும் திறனில் இந்திய அணிக்கு கீழே ஹாங்காங் மட்டுமே உள்ளது. மேலும், கேட்ச் பிடிக்கும் திறனில் பாகிஸ்தான் சிறந்த அணியாக உள்ளது. அந்த அணி தங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளில் 86.3 சதவீதத்தை பிடித்துள்ளது.
1 - இந்தியா: 12 (67.5%)
2 - ஹாங்காங்: 11 (52.1%)
3 - வங்கதேசம்: 8 (74.1%)
4 - இலங்கை: 6 (68.4%)
5 - ஆப்கானிஸ்தான்: 4 (76.4%)
6 - ஓமன்: 4 (76.4%)
7 - பாகிஸ்தான்: 3 (86.3%)
8 - ஐக்கிய அரபு அமீரகம்: 2 (85.7%)
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய ஃபீல்டர்களின் சொதப்பல் படலம் 12வது ஓவரில் தொடங்கியது. 40 ரன்களில் இருந்த சையிஃப் ஹசனுக்கு, அக்சர் படேல் தனது சொந்த பந்துவீச்சில் ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். ஆனால், உண்மையான ஃபீல்டிங் சரிவு 16 மற்றும் 17வது ஓவர்களில்தான் அடுத்தடுத்து அரங்கேறியது.
16வது ஓவரின் முதல் பந்தில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை சையிஃப் ஹசன் டீப் மிட்-விக்கெட்டை நோக்கி அடித்தார். அங்கே சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் பந்தைப் பிடிக்க ஓடினர். சிவம் துபே கேட்ச் பிடிக்கும் நிலையில் இருந்தபோதும், அருகில் ஓடி வந்த ஹர்திக் பாண்ட்யாவால் கவனம் சிதறி, கையிற்கு வந்த பந்தை நழுவவிட்டார். இது மிகவும் எளிதான ஒரு வாய்ப்பாகும்.
அதே 16வது ஓவரின் நான்காவது பந்தை சையிஃப் ஹசன் ஷார்ட் மிட்-விக்கெட்டின் மேலே அடித்தார். பந்து உயரப் பறந்தது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஓடி வந்து, டைவ் அடித்துப் பிடிக்க முயன்றும், பந்தின் பாதையைச் சரியாகக் கணிக்கத் தவறியதால் அந்த வாய்ப்பும் நழுவியது.
அடுத்து குல்தீப் யாதவ் வீசிய 17வது ஓவர் ஐந்தாவது பந்தை சையிஃப் ஹசன் மீண்டும் ஸ்வீப் செய்ய, டீப் ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த அபிஷேக் ஷர்மா, பந்தின் வேகத்தைக் கணிக்கத் தவறி, டைவ் அடிக்கத் தாமதமானதால், பந்து அவரது விரல்களில் பட்டு நழுவியது.
இந்தியாவின் பேட்டிங்கும், பந்துவீச்சும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத் தந்தாலும், ஃபீல்டிங்கில் உள்ள இந்த மிகப்பெரிய பலவீனம், இறுதிப் போட்டிக்கு முன் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. நான்கு முறை 'வாழ்வு' பெற்ற சையிஃப் ஹசன், இறுதியில் 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், இறுதிப் போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த ஆட்டத்தில் இது போன்ற தவறுகள், கோப்பையையே இழக்கச் செய்துவிடும் அபாயம் உள்ளது.